போக்சோ சட்டம்: அரசுப் பள்ளி மாணவியருக்கு விழிப்புணர்வு

ஆட்டையாம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் "போக்சோ' சட்டம் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம்

ஆட்டையாம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் "போக்சோ' சட்டம் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் பள்ளித் தலைமையாசிரியை யோகேஸ்வரி  தலைமையில் நடைபெற்றது.
தமிழக அரசு சார்பில் அனைத்து மாணவியர் மற்றும் இளம்பெண்களுக்கு "போக்சோ' சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளர் குலசேகரன் மேற்பார்வையில், எஸ்.ஐ.க்கள் கருணாகரன், வெங்கடாஜலம் ஆகியோர் முன்னிலையில் இநதக் கூட்டம் நடைபெற்றது.
இதில் காவல் துறையினர் பேசுகையில், இந்திய தண்டனை சட்டத்தில் ஏற்கெனவே பெண்கள் பாதுகாப்புக்கு தேவையான சட்டங்கள் உள்ளன. கடந்த 2012-இல் புதிதாக இளம்பெண்கள் பாதுகாப்புக்காக "போக்சோ' சட்டம் கொண்டுவரப்பட்டது. மாணவியருக்கு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து "மிஸ்டு கால்' வந்தால் அதைப் பற்றி ஆராய வேண்டாம். அறிமுகம் இல்லாத நபர்கள் கொடுக்கும் எந்தப் பொருளையும் வாங்கி சாப்பிட வேண்டாம். தவறான எண்ணத்தில் பின்தொடர்பவர்கள், தொட முயற்சிப்பவர்களை பற்றி உடனடியாக பள்ளி ஆசிரியர்களிடமோ, பெற்றோர்களிடமோ தெரிவிக்க வேண்டும்.
தவறான நபர்கள் குறித்து போலீஸில் புகார் செய்தால், அவர்கள் மீது "போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தகுந்த தண்டனை பெற்றுத்தருவதோடு, அவருக்கு உடந்தையாக இருப்பவர்களுக்கும் சேர்த்து தண்டனை வாங்கித் தர முடியும்.
மாணவியர் யாருக்கும் பயப்படாமல் தைரியமாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை பற்றி போலீஸில் புகார் செய்ய முன்வர வேண்டும் என்றனர்.
மேலும், இதில் போக்குவரத்து விதிகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. இருசக்கர வாகனம் ஓட்டும் பெற்றோர்களை கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல மாணவர்கள் வற்புறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com