சேலம் மாவட்ட மக்கள்தொகை 38 லட்சத்தைத் தாண்டியது: ஆட்சியர்

சேலம் மாவட்டத்தின் மக்கள்தொகை 38 லட்சத்தைத் தாண்டிவிட்டது என ஆட்சியர் சி.அ. ராமன் தெரிவித்தார். 

சேலம் மாவட்டத்தின் மக்கள்தொகை 38 லட்சத்தைத் தாண்டிவிட்டது என ஆட்சியர் சி.அ. ராமன் தெரிவித்தார்.
உலக மக்கள்தொகை தினத்தினை முன்னிட்டு சோனா கல்லூரியில் விழிப்புணர்வுப் பேரணி மற்றும் கருத்தரங்கை ஆட்சியர் சி.அ.ராமன் வியாழக்கிழமை தொடங்கி வைத்துப் பேசியது:
உலகளாவிய மக்கள் பிரச்னை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 11-ஆம் தேதி உலக மக்கள்தொகை தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.   
குடும்பத் திட்டமிடல், பாலின சமத்துவம்,  வறுமை, தாய்வழி சுகாதாரம் மற்றும் மனித உரிமைகளின் முக்கியத்துவம் போன்ற பல்வேறு மக்கள் பிரச்னைகளை குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 
"தாய் சேய் நலத்தின் பாதுகாப்பு - திட்டமிட்ட குடும்பத்தின் பொறுப்பு' என்ற கருப்பொருளை மையமாக வைத்து உலக மக்கள்தொகை தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 
இதையொட்டி ஜூலை 11-ஆம் தேதி முதல் ஜூலை 24-ஆம் தேதி வரை இரு வார குடும்ப சுகாதார விழா கொண்டாடப்படுகிறது. 
அதில் தகுதியுள்ள தம்பதியர்களுக்கு நிரந்தர  மற்றும் தற்காலிக குடும்ப நல முறை ஊக்குவித்தல் மற்றும் இலவச குடும்பநல ஆலோசனைகள் மற்றும் குடும்பநல அறுவை சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்று வருகின்றன.
சேலம் மாவட்டத்தின் மக்கள்தொகை 38 லட்சத்தைத் தாண்டிவிட்டது. மாவட்டத்தின் கல்வி அறிவு விகிதம் ஆண் 80. 2, பெண் 65.2 சதவீதம் ஆகும். 4,500 பிரசவங்கள் மாதந்தோறும் நடைபெறுகின்றன. 
அதில் இரண்டு குழந்தைகளுக்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு நிரந்தர குடும்ப அறுவை சிகிச்சை 1,000 பேருக்கும் தற்காலிக கருத்தடை முறைகள் 2,500 பேருக்கும் வழங்கப்படுகின்றன.
எந்த ஒரு கருத்தடை சாதனங்கள் மேற்கொள்ளாத தாய்மார்கள் எண்ணிக்கை 1,000 ஆகும்.
கடந்த ஆண்டு ஆண்களுக்கான (என்.எஸ்.வி.) தழும்பில்லாத கருத்தடை சிகிச்சை 7 நபருக்கும், 11,034 தாய்மார்களுக்கு குடும்ப நல நிரந்தர அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் ஆண்களுக்கான தழும்பில்லாத கருத்தடை சிகிச்சை 1 நபருக்கும் பெண்களுக்கான நிரந்தர குடும்பநல அறுவை சிகிச்சை 3,153 பேருக்கும் செய்யப்பட்டுள்ளது.
கருக்கலைப்பு மாத்திரைகள் இலவசமாக அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தாய்மார்களுக்கு வழங்கப்படுகிறது. ரகசியம் காக்கப்படுகிறது என்றார்.   
பின்னர் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் வாசிக்க அனைவரும் பின்தொடர்ந்து உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து விழிப்புணர்வு பதாகையில் ஆட்சியர் கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். 
நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) மருத்துவர் வி. சத்யா, துணை இயக்குநர் (குடும்ப நலம்) மருத்துவர் எம். வளர்மதி, சோனா கல்விக் குழுமங்களின் தலைவர் சி.வள்ளியப்பா, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியர் மருத்துவர் எஸ்.எஸ். சுபா, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க மாவட்ட திட்ட மேலாளர் மருத்துவர் எல். அருணாசலம், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் எஸ்.ஆர். இளங்கோ மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com