இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் பணியில் சேர கிராம மக்கள் எதிர்ப்பு
By DIN | Published On : 13th July 2019 10:06 AM | Last Updated : 13th July 2019 10:06 AM | அ+அ அ- |

ஓமலூர் அருகே இடமாற்றலில் வந்த ஆசிரியரை பணியில் சேர விடாமல் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓமலூர் அருகேயுள்ள தும்பிப்பாடி அரசு நடுநிலைப் பள்ளியில் சுமார் 150 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஆசிரியராக அன்புமணி என்பவர் கடந்தாண்டு பணியாற்றி வந்தார். இவர் மீது பல்வேறு புகார் கூறப்பட்டன. இதனைத் தொடர்ந்து அவரைக் கண்டித்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனைத் தொடர்ந்து ஆசிரியர் அன்புமணி கன்னங்குறிச்சி பள்ளிக்கு தற்காலிகமாக அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது, ஓமலூர் அருகேயுள்ள புளியம்பட்டி பள்ளிக்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்குச் சென்றபோது அவரை வேறு பள்ளிக்கு மாற்றுமாறும், அவர் பணியாற்றிய பள்ளிகளில் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், அவரால் இந்தப் பள்ளியிலும் பிரச்னை ஏற்படலாம் என்றும் புகார் கூறி, குழந்தைகளின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர் பள்ளியில் இருந்து வட்டாரக் கல்வி அலுவலத்துக்கு சென்றார். வட்டாரக் கல்வி அலுவலர் மாலதியிடம் புளியம்பட்டியில் நடந்தது குறித்து கூறியுள்ளார். இதுகுறித்து ஆசிரியர் அன்புமணி கூறும்போது, நான் பணியாற்றும் பள்ளிகளில் மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையிலும், சமூக சேவை செய்யும் வகையிலும் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது வழக்கம். மாணவர்களுக்கு புதுமைகளை கற்றுக்கொடுப்பேன். அதனை பிடிக்காத சிலர் என்மீது அவதூறு பரப்பி தவறாகச் சித்தரித்து விடுகின்றனர். மற்றபடி என்னைப் பற்றி மாணவர்களிடம் விசாரித்தால் எனது கல்விப் பணி குறித்து நன்றாக தெரியும் என்றார். கிராம மக்களின் போராட்டத்தால் அவர் பள்ளிக்குச் செல்லவில்லை. அதே பள்ளிக்கு அனுப்பலாமா அல்லது வேறு பள்ளிக்கு மாற்றலாமா என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.