சுடச்சுட

  

  நிலம் ஆக்கிரமிப்பு, கொலை மிரட்டல்: சேலம் எம்.பி., எஸ்.ஆர். பார்த்திபன் மீது வழக்குப் பதிவு

  By DIN  |   Published on : 13th July 2019 10:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சேலம் மக்களவைத்  தொகுதி தி.மு.க. உறுப்பினர்  எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்ட நால்வர் மீது கொலை மிரட்டல்,   வனத் துறைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்தல், அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் மேச்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
   சேலம் மாவட்டம்,  ஓமலூர் வட்டம்,  சமூகக் காடுகள் வனச் சரகராகப் பணிபுரிந்துவரும் திருமுருகன் (56)  என்பவர், கடந்த ஜூன் 16-ஆம் தேதி மேச்சேரி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.  அப் புகாரில்,  மேச்சேரி  ஒன்றியம்,  பெரியசாத்தப்பாடியில் உள்ள கரடு வருவாய்த் துறைக்குச் சொந்தமானது. இந்தப் பகுதி வனத் துறை சார்பில் மரம் நட்டு வளர்க்க 1961-இல் வனத் துறைக்கு வழங்கப்பட்டது. 1962-இல் வனத் துறை மூலம்  40.05 ஹெக்டேர் பரப்பளவில் செடிகள் நடப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது.  இங்கு செடிகள் நடவு செய்வதற்கு முன்பும், பின்பும் எவ்விதக் குடியிருப்புகளோ, விவசாய நிலங்களோ இல்லை. இப் பகுதியில் வனவர் வடிவேலுவுடன் களத் தணிக்கை சென்றபோது வேடன் கரட்டின் அடிப்பகுதியில் இரும்புக்  கம்பத்திலான செக்போஸ்ட் அமைக்கப்பட்டிருந்தது.  
  அதில் தொடர்புக்கு என்று கொடுக்கப்பட்டிருந்த செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு  அரசு நிலத்தில் ஏன் செக்போஸ்ட்  அமைத்தீர்கள் என்று கேட்டபோது,  மறுமுனையில் பேசிய நபர் எனது  பெயர் பழனிசாமி,  நான் சேலம் எம்.பி., எஸ்.ஆர்.பார்த்திபனின் வேலையாள்.  குறிப்பிட்ட இடம் எம்.பி.க்குச் சொந்தமானது.  யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது.  உள்ளே வந்தால் கை,  கால்களை வெட்டி விடுவோம். எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும்  உள்ளே விடக் கூடாது என்று பார்த்திபன் கூறியதாகக் கூறினார்.
  இதையடுத்து,  மாற்று வழியாகச் சென்று களத் தணிக்கை செய்தபோது, கரட்டின்  மேல் சில விளை நிலங்கள் இருப்பதும்,  அந்த விளை நிலங்களுக்குச்  செல்ல 167 மீட்டர் நீளம்,  ஒன்பது மீட்டர் அகலத்தில் மலையைக் குடைந்து பல டன்  மண்,  கல் வெட்டிக் கடத்தியது தெரியவந்தது.  வனத் துறைக்குச் சொந்தமான பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 200-க்கும் மேற்பட்ட பல ஜாதி மரங்கள் வெட்டிக் கடத்தியதோடு, அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. 
   இந்த கரட்டுப் பகுதியின் மேல் பகுதியில் கிராமங்கள் இல்லாத நிலையில், கரட்டின் மேல் உள்ள ராஜமாணிக்கம் மகன் அசோக்குமார்,  சுப்பராவ் மகன் அனந்த பத்மநாபன் ஆகியோர் நிலங்களுக்கும்,  எஸ்.ஆர்.பார்த்திபனின் அலுவலகம் செல்வதற்காகவும் மட்டுமே தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.  இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய  எஸ்.ஆர்.பார்த்திபன்,  அசோக்குமார், அனந்த பத்மநாபன்,  காவலாளி பழனிசாமி ஆகியோர் மீது விசாரணை செய்து நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
       இதனை விசாரித்த  மேச்சேரி காவல் உதவி ஆய்வாளர் மனோன்மணி சேலம் எம்.பி., எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்ட நால்வர் மீது அரசு பணியைச் செய்யவிடாமல் தடுத்தல், அரசு சொத்துகளைக் களவாடுதல்,  அத்துமீறி  நுழைதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.  வழக்குப் பதிவு செய்து ஒரு மாதமாக போலீஸார் ரகசியமாக வைத்திருந்தனர்.  தற்போது போலீஸாரே கசிய விட்டுள்ளனர்.  இச் சம்பவம் சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
       இதுகுறித்து சேலம் எம்.பி.,  எஸ்.ஆர்.பார்த்திபன் தரப்பில் பேசிய ஒருவர்,  இது முழுமையாக  ஜோடிக்கப்பட்ட வழக்கு.  இந்தச் சம்பவத்துக்கும், எம்.பி.க்கும்  எவ்விதத் தொடர்பும் இல்லை. அவரது பதவிக்கும், வளர்ச்சிக்கும் பங்கம் விளைவிக்கும் விதத்தில் திட்டமிட்டு இந்த பொய் வழக்குப் புனையப்பட்டுள்ளது.  சட்டப்படி இதனை எதிர்கொள்வோம் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai