சங்ககிரியை சுற்றியுள்ள கிராமங்களில் 22 உயர்மின் கோபுரங்கள் அமைக்க நில அளவீடும் பணிகள் நிறைவு

சேலம் மாவட்டம்,  சங்ககிரி வட்டத்துக்குள்பட்ட சின்னாகவுண்டனூர்,  வீராச்சிப்பாளையம்

சேலம் மாவட்டம்,  சங்ககிரி வட்டத்துக்குள்பட்ட சின்னாகவுண்டனூர்,  வீராச்சிப்பாளையம்  உள்ளிட்ட  கிராமங்களில் பவர் கிரீட்  நிறுவனம் சார்பில்  உயர்மின் கோபுரம் அமைப்பதற்காக நிலங்களை அளவீடும் செய்யும் பணி  போலீஸ் பாதுகாப்புடன்  முதல் கட்டமாக நடைபெற்றுள்ளது.  
திருப்பூர் மாவட்டம், புகளுர் முதல் சத்தீஸ்கர் மாநிலம் ரய்க்கார்  வரை 800 கிலோவாட் மின்பாதை  உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன.   தமிழ்நாட்டில்  வேலூர்,  கிருஷ்ணகிரி,  தருமபுரி, சேலம்,  நாமக்கல்,  ஈரோடு, திருப்பூர் வழியாக இத் திட்டம் நடைபெற்று வருகிறது.  சங்ககிரி வட்டப் பகுதியில் 34 இடங்களில்  இப் பணிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து  முதல் கட்டமாக சங்ககிரி வட்டத்துக்குள்பட்ட சின்னாகவுண்டனூர்,  கலியனூர், வரதம்பட்டி,  தேவண்ணகவுண்டனூர்,  மஞ்சக்கல்பட்டி,  வீராச்சிப்பாளையம் அமானி,  வீராச்சிப்பாளையம் அக்ரஹாரம்  உள்ளிட்ட பகுதியில் கடந்த பல மாதங்களாக வருவாய்த் துறையினருடன் பவர் கிரீட் நிறுவனத்தினர் உயர்மின் கோபுரம் அமைப்பதற்கான நில அளவைப் பணிக்காக விவசாயிகளிடம் நடைபெற்ற வந்த பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படாத நிலையில்,  பவர்கிரீட் நிறுவன மேலாளர் பாஸ்கரன்  தலைமையிலான ஊழியர்கள், வருவாய் கோட்டாட்சியர் மு.அமிர்தலிங்கம்,   டி.எஸ்.பி., எஸ்.அசோக்குமார், வட்டாட்சியர் கே.அருள்குமார் ஆகியோர் முன்னிலையில்  புதன்கிழமை முதல்  வெள்ளிக்கிழமை வரை மூன்று நாள்கள்  22 மின் கோபுரங்கள் அமைப்பதற்கான நில அளவீடு செய்யும் பணிகளை போலீஸ் பாதுகாப்புடன் நிறைவு செய்துள்ளனர்.  அளவீடு செய்யப்பட்டுள்ள நிலங்களின் உரிமையாளர்களுக்கு  இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கான ஆயத்தப் பணியை  வருவாய்த்துறையினர் தொடங்கியுள்ளனர். 

எதிர்ப்புகள் இல்லாமல் பணி நிறைவு
விவசாய நிலங்களில் உயர்மின்  கோபுரம் அமைத்தால் சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்படுவர்,   நிலங்களில் விவசாயம் செய்ய இயலாத நிலை ஏற்படும் எனக்கூறி,  குழாய் மூலம் மின்சாரத்தைக் கொண்டு செல்ல வலியுறுத்தி விவசாயிகள், அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதன், வியாழக்கிழமைகளில்  தர்னா போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அரசுப் பணிகளை செய்யவிடாமல் தடுத்தாகக் கூறி போலீஸார், புதன்கிழமை 15 பேரையும், வியாழக்கிழமை 16 பேரையும் கைது செய்து மாலையில் விடுவித்தனர். இதையடுத்து வெள்ளிக்கிழமை விவசாயிகளின் எதிர்ப்புகள் இன்றி நில அளவீடு செய்யும் பணிகளை பவர்கிரீட்  நிறுவன ஊழியர்கள் நிறைவு செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com