புதிய கண்டுபிடிப்புகளின் மையமாக பல்கலைக்கழகங்கள் திகழ வேண்டும்: துணைவேந்தர் பொ.குழந்தைவேல்

புதிய கண்டுபிடிப்புகளுக்கும்,  ஆய்வுகளுக்கும், மாற்றங்களுக்கு வித்திடும் களமாகவும்,  மையமாகவும்

புதிய கண்டுபிடிப்புகளுக்கும்,  ஆய்வுகளுக்கும், மாற்றங்களுக்கு வித்திடும் களமாகவும்,  மையமாகவும் பல்கலைக்கழங்கள் திகழ வேண்டும் என பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொ.குழந்தைவேல் தெரிவித்தார்.
மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு - 2019 தொடர்பான கருத்தரங்கம்  பெரியார் பல்கலைக்கழகத்தில்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பதிவாளர்  (பொறுப்பு) கே.தங்கவேல் வரவேற்றார். இக் கருத்தரங்கில் தலைமையுரையாற்றிய  துணைவேந்தர் பொ.குழந்தைவேல்,  இந்தியாவில் பல கல்விக் கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.  தற்போது, தேசிய அளவில் ஒரே  மாதிரியான கல்வித் தரத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில், தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை தரமான கல்வியை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய கல்விக் கொள்கையை  மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை அதிகமுள்ளது. 
இந்தியாவில் உயர்கல்வி பெறுபவர்களின் எண்ணிக்கை 25 விழுக்காடாக உள்ளது. தமிழ்நாட்டில் உயர்கல்வி கற்போர் எண்ணிக்கை 49 விழுக்காடாக உள்ளது. சுதந்திரத்துக்கு முன்பு பல அரிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. ஆனால், சுதந்திர இந்தியாவில் குறிப்பிடும்படியான கண்டுபிடிப்புகள் ஏதுவும் நிகழ்த்தப்படவில்லை. எனவே,  அடுத்த 20 ஆண்டுகளுக்குள் பெரும் மாற்றத்தை  உருவாக்கும் நோக்கத்தில் இந்த கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக கட்டமைப்பு முதல் மாணவர்  சேர்க்கை  வரை அனைத்து நிலைகளிலும் தேசிய அளவிலான தரத்தை உறுதி செய்ய வேண்டியிருக்கிறது.  தரமான சமூக பொறுப்புடன் கூடிய  மாணவர்களை உருவாக்குவது இதன் நோக்கமாகும். இதற்கு நம்முடைய அனைவரின் பங்களிப்பும் முக்கியமானதாகும். பல்கலைக்கழகங்களில் குறைந்தபட்சம் 10 ஆயிரம் மாணவர்கள் பயிலும் வகையிலான சூழல் எதிர்காலத்தில் உருவாகும்.  அதேபோல ஆசிரியர் கல்வி உள்ளிட்ட பலதுறை பாடங்களும் ஒரே இடத்தில் கற்பிக்கும் நிலை ஏற்படும். இதனால், நீடித்த வளர்ச்சி  என்பது உறுதிப்படுத்தப்படும். புதிய கல்விக் கொள்கையின்படி, புதிய தன்னாட்சி கொண்ட கல்லூரிகள் உருவாகும் என்றார். இந்த நிகழ்ச்சியில்,  அமெரிக்க நியூயார்க் மாநில பல்கலைக்கழகத் தேசியக் கல்வி அறக்கட்டளையின் பேராசிரியர் பி.ராமசாமி,  புதிய கல்விக் கொள்கை குறித்து பேசினார். ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கே.குமாரசாமி,  வை.நடராஜன், டீன் வி.கிருஷ்ணகுமார்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com