சுடச்சுட

  


  கல்லாநத்தம் முட்டல் ஏரி மதகுகளை சரியாக மூடாததால் மழைநீர் முழுவதும் வெளியேறி வீணாகியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
  ஆத்தூர்  மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பருவமழை பொய்த்ததால் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.  மேலும் வறட்சியால் விவசாயிகளும் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கல்வராயன் மலைப் பகுதியில் பலத்த மழை பெய்தது. ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் சுமாரான மழையே பெய்தது.
  கல்வராயன் மலைப் பகுதியில்  பெய்த மழையின் காரணமாக  ஆணைவாரி மடுவு நீர்வீழ்ச்சியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ள நீர் முட்டல் ஏரிக்கு வந்தது. அப்போது ஏரியில் உள்ள வாய்க்கால் பாசன மதகு கதவில்லாமல் இருந்ததாலும்,  ஏரியின் இரண்டு மதகுகளின் கதவுகள் சற்றுத்தூக்கி இருந்ததாலும்  வெள்ள நீர் ஏரியில் தேங்காமால்  வெளியேறி வீணாகியது. இந்த வெள்ள நீர் அருகில் உள்ள வயல்கள்,  பாக்குத்தோப்பு, கிணறுகளுக்கு புகுந்தது. 
  இதுகுறித்து தகவல் அறிந்து விவசாயிகள் மதகுகளை அடைக்க முயற்சி எடுத்தனர். பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கும் தகவல் அளித்தனர். பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் மாணிக்கம் தலைமையில் ஜேசிபி, பொக்லைன் இயந்திரங்களுடன் சென்று  நீர் வெளியேறுவதை அடைக்க முயன்றனர்.
  ஆனால் சுமார் 6 மணி நேரத்துக்கு பிறகே நீர் வெளியேறுவதை சற்று நிறுத்த முடிந்தது. மழை நீர் வெளியேறாமல் இருந்திருந்தால் முட்டல் ஏரியில் முக்கால் பகுதி நிரம்பியிருக்கும். அனைத்து விவசாயக் கிணறுகளிலும் ஊற்று எடுத்திருக்கும் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai