வீரகனூரில் ஏரியைச் சீரமைக்க பூமி பூஜை
By DIN | Published On : 15th July 2019 09:40 AM | Last Updated : 15th July 2019 09:40 AM | அ+அ அ- |

கெங்கவல்லி அருகே வீரகனூர் ஏரியை சீரமைக்க ரூ.29 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதையடுத்து அப் பணிக்கான பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .
கெங்கவல்லி அருகே வீரகனூர் பேரூராட்சியில், சுவேத நதி, ஏரி மற்றும் ஏரிக்கு வரும் நீர்வழிப்பாதை ஆகியவற்றை முதல்வரின் குடிமராமத்துத் திட்டத்தின்கீழ் சீர் செய்து தர வேண்டும் என்று கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அதன்படி ஊர் முக்கிய பிரமுகர்களும் அதிகாரிகளைச் சந்தித்து பலமுறை இது சம்பந்தமாக வலியுறுத்தி வந்தனர். அதன் எதிரொலியாக, ரூ. 29 லட்சம் திட்ட மதிப்பீட்டில், வீரகனூர் ஏரி மற்றும் நீர்வழிப்பாதை ஆகியவற்றை சீர்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி இந்தப் பணிகளுக்காக மண்டல அதிகாரி முன்னிலையில் பூமி பூஜை நடைபெற்றது.
இதில் மண்டல நீர்வளத்துறை அதிகாரி ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் சாந்தகுமார், பாசன உதவியாளர் பழனிசாமி, அதிமுக நகரச் செயலாளர் ராஜேந்திரன், வீரகனூர் ஏரிப் பாசன ஆயக்கட்டு தலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் ஆயக்கட்டு பொருளாளர் ராமநாதபுரம் கணேசன், பசுமை இயக்கம் சார்பாக வேல்முருகன் மற்றும் ஏரிப் பாசன விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல் கட்டமாக கரையைப் பலப்படுத்துதல், மதகுகளைச் சீரமைத்தல், ஏரி சுற்றுப்புறத்திலுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றிவிட்டு மரக்கன்றுகளை நடுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்.
பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று குடிமராமத்து திட்டத்தின்கீழ் இந்தப் பணிகளை முடிக்க நிதி ஒதுக்கிய அரசுக்கு வீரகனூர் பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.