சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கு முதல்வர் அறிவித்த திட்டங்கள் வரவேற்கத்தக்கவை: சிறு, குறு தொழிற்சாலை சங்கம் பாராட்டு

தமிழகத்தில் சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கு  முக்கியத்துவம் அளித்து முதல்வர் அறிவித்துள்ள

தமிழகத்தில் சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கு  முக்கியத்துவம் அளித்து முதல்வர் அறிவித்துள்ள திட்டங்கள் வரவேற்கத்தக்கவை என சேலம் மாவட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் சங்கத்தின் தலைவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக  அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் தொழில்துறை வளர்ச்சிக்கான அறிவிப்பு சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களை புதிதாக அமைக்கவும்,  விரிவுப்படுத்தவும் தற்போது வழங்கப்படும் முதலீட்டு மானியத்தின் அதிக உச்சவரம்பு ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ. 50 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.  
தொழில் தோழன் என்ற இணையவழி குறைதீர் மையம் ஒன்றை புதிதாக ரூ.50 லட்சத்தில் அமைத்து அதன் மூலம் பெறப்படும் புகார்கள் நான்கு வாரங்களில் தீர்வு காணப்படுவதும், யாதும் ஊரே என்ற தனி சிறப்புப் பிரிவு மற்றும் ரூ.60 லட்சத்தில் உருவாக்கி உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள், தமிழ் சங்கங்கள், தொழில் அமைப்புகளுடன் தொடர்புபடுத்தி முதலீட்டு தூதுவர்களை உருவாக்கி தமிழகத்தில் முதலீடு செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்தம் ஆலோசனைகளை பெறவும், முதலீடுகளை ஈர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகும்.
மேலும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கிட தொழில் தொடங்க முன்வரும் முதலீட்டாளர்களை வல்லுநர்களைக் கொண்டு அடையாளம் கண்டு ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா, சீனா,  தைவான், பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் தனித்தனியாக சிறப்பு அமைவுகள் அமைக்கப்பட உள்ளன.
தொழில் வளர் தமிழகம் என்ற பெயரில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆண்டுதோறும் ரூ.10 கோடி செலவில் நவீன உத்திகளைப் பயன்படுத்தி கூட்டங்கள்,   கருத்தரங்குகள் இணையவழிப் பரப்புரை மூலம் செயல்படுத்த இருப்பது நிச்சயம் தொழில் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருக்கும்.
20 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் தனியார் மூலம் சிறு தொழில்களுக்கு அரசு மானியத்துடன் தொழிற்பேட்டைகளை அமைக்கவும், 100 ஏக்கர் அல்லது அதற்கு மேல் நிலம் வைத்துள்ள தனியார் நில உரிமையாளர்களை இணைந்து கூட்டாண்மை முறையில் தொழில் பூங்காக்களை சிப்காட் நிறுவனம் உருவாக்கி அந்த பூங்காக்களுக்கு சிப்காட் தொழிற் பூங்காக்களுக்கான சலுகைகளை நீடித்து தர அரசு எடுத்துள்ள செயல்திட்டத்தை வரவேற்கிறோம்.
தமிழகத்தில் சிறு மற்றும் குறு தொழில் வளர்ச்சிக்காக முக்கியத்துவம் கொடுத்து தமிழக முதல்வர் அறிவித்துள்ள அனைத்துத் திட்டங்களையும் பாராட்டி வரவேற்கிறோம். இதற்கு உறுதுணையாக இருந்த ஊரக தொழில்துறை அமைச்சர்  பெஞ்சமின், தலைமைச் செயலாளர் சண்முகம், கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் செயலர் ஹன்ஸ்ராஜ்வர்மா ஆகியோருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com