எடப்பாடியில் கழிவுநீரைச் சுத்திகரிக்க புதிய திட்டம்: அதிகாரிகள் ஆய்வு
By DIN | Published On : 19th July 2019 02:00 AM | Last Updated : 19th July 2019 02:00 AM | அ+அ அ- |

எடப்பாடி நகராட்சியில் சரபங்கா நதியில் சேரும் கழிவுநீரை சுத்திகரித்து விவசாயப் பயன்பாட்டுக்கு வழங்கும் திட்டத்துக்கான முதல்கட்ட ஆய்வு பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஏற்காடு மலைப் பகுதியில் உற்பத்தியாகும் சரபங்கா நதி ஓமலூர், தாரமங்கலம் வழியாக எடப்பாடி பகுதியில் பாய்ந்து, எடப்பாடியை அடுத்த தேவூர் பகுதியில் காவிரி ஆற்றில் கலந்து வருகிறது.
இந் நிலையில் எடப்பாடி நகராட்சிக்கு உள்பட்ட 30 வார்டு பகுதியில் உற்பத்தியாகும் கழிவு நீரானது கால்வாய்கள் வழியாக ஓடி சரபங்கா ஆற்றில் 19 இடங்களில் கலந்து வருகிறது.
இதனால் ஆறு மாசுபட்டு பெரிய அளவிலான கழிவுநீர் காய்வாயாக மாறியுள்ளது. இதைப் போக்கும் வகையில் தமிழக அரசு, எடப்பாடி நகராட்சி பகுதியில் உருவாகும் கழிவு நீரை நவீன சுத்திகரிப்பு நிலையங்கள் வாயிலாக சுத்திகரிப்பு செய்து அதை விவசாயப் பயன்பாட்டுக்கு வழங்கும் விதமாக, புதிய திட்டத்துக்கு அனுமதி அளித்தது.
இதையடுத்து வியாழக்கிழமை எடப்பாடி நகராட்சி பகுதிக்கு வந்த, தமிழக குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய அதிகாரிகள், எடப்பாடி நகராட்சியில் சரபங்கா ஆற்றுப் படுகையில் கழிவுநீர் கால்வாய்கள் கலக்கும் இடங்களைப் பார்வையிட்டனர். எடப்பாடி நகராட்சியில் பாயும் கழிவுநீர் கால்வாய்களை ஒருங்கிணைத்து சுத்திகரிப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்தனர்.
ஆய்வில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் லிங்கமூர்த்தி, நில நீர் வல்லுநர் முத்துகுமாரசாமி, நிர்வாக பொறியாளர் செங்கோடன், உதவி நிர்வாக பொறியாளர் பொன்னுசாமி , எடப்பாடி நகராட்சி ஆணையாளர் முருகன் உள்ளிட்ட அலுவலர்கள் இடம் பெற்றிருந்தனர்.