மேட்டூர் நீர்த்தேக்கத்தில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு
By DIN | Published On : 19th July 2019 02:01 AM | Last Updated : 19th July 2019 02:01 AM | அ+அ அ- |

மேட்டூர் நீர்த் தேக்கத்தில் விவசாயிகள் வண்டல் மண் அள்ளும் பணியை மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் வியாழக்கிழமை பார்வையிட்டார்.
மேட்டூர் நீர்த்தேக்கத்தில் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் அளிக்கப்படுகிறது. இத் திட்டப் பணிகளை பார்வையிட்ட பின்னர் மாவட்ட ஆட்சியர் சி. அ. ராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நிகழ் ஆண்டில் சேலம் மாவட்டத்தில் முதல் கட்டமாக மேட்டூர் நீர் தேக்கப் பகுதி மற்றும் கெங்கவள்ளி வட்டத்துக்குள்பட்ட பெரிய ஏரி மற்றும் வெள்ளையூர் ஏரி ஆகிய ஏரிகளிலும் அரசின் விதிகளுக்கு உட்பட்டு விவசாயிகளுக்கு இலவச வண்டல் மண் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்கம், பொதுமக்கள் சொந்த தேவை மற்றும் விவசாயத் தேவைகளுக்கு களிமண், வண்டல் மண், சவுடு அளிக்கப்படுகின்றன. நன்செய் நிலத்துக்கு ஏக்கருக்கு 75 கனமீட்டர், ஹெக்டேருக்கு 185 கனமீட்டர், புன்செய் நிலத்துக்கு ஏக்கருக்கு 90 கன மீட்டர் ஹெக்டேருக்கு 22 கனமீட்டர் மற்றும் இதர சொந்த பயன்பாட்டுக்கு மண், சவுடு மண், கிராவல் ஆகியவை 30 கன மீட்டர் மண்பாண்டம் செய்வோருக்கு 60 கன மீட்டர் ஆகியவை கட்டணமின்றி எடுத்துச் செல்ல 20 நாள்களுக்கு சில நிபந்தனைக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படுகின்றன.
2017-ஆம் ஆண்டு 415 ஏரிகளில் 37,53,063 கனமீட்டர் மண் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டு 39,583 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 2018-ஆம் ஆண்டு 105 ஏரிகளில் 2,17,599 கனமீட்டர் வண்டல் மண் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டு 4,059 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
நிகழ் ஆண்டில் மேட்டூர் நீர்த்தேக்கப் பகுதி மற்றும் கெங்கவல்லி வட்டம் பெரியஏரி, வெள்ளையூர் ஏரி, ஆகிய 2 ஏரிகளிலும் இலவச வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சேலம மாவட்டத்தில் இதுவரை 139 விவசாயிகளால் 14,587 கனமீட்டர் வண்டல் மண் இலவசமாக எடுக்கப்பட்டுள்ளன. பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 58 ஏரிகள், ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 66 ஏரிகள், பேரூராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள 6 ஏரிகளிலும் வண்டல் மண் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஆட்சியர் சி.ராமன் தெரிவித்தார்.
ஆய்வின்போது மேட்டூர் வருவாய்க் கோட்டாட்சியர் லலிதா, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் ஜெ. கோபி, உதவிப்பொறியாளர் மதுசூதனன், வட்டாட்சியர் செந்தில், கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு ஆணையாளர் (கிராம ஊராட்சிகள்) ராமநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.