Enable Javscript for better performance
நீர் மேலாண்மை, சேமிப்பு: விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    நீர் மேலாண்மை மற்றும் நீர் சேமிப்பு குறித்து பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணியை ஆட்சியர் சி.அ.ராமன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
     நாடு முழுவதும் காணப்படும் நீர் தேவையின் நிலைமையை வெளிப்படுத்தும் வகையில், ஜூலை 2019 முதல் நவம்பர் 2019 வரை தேசிய அளவிலான நீர் பாதுகாப்பு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திட நீர் மேலாண்மை இயக்கம் (ஜலசக்தி அபியான்) உத்தரவிட்டுள்ளது.
     இதன் ஒரு பகுதியாக, நீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணியை சேலம் அஸ்தம்பட்டி வனச்சரக அலுவலக வளாகத்தில் ஆட்சியர் சி.அ.ராமன் தொடங்கி வைத்தார். பேரணி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் 12 பள்ளிகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
     பேரணியில், நீர் மேலாண்மை மற்றும் நீர் சேமிப்பு குறித்தும், நீர் சிக்கனம் குறித்தும் விழிப்புணர்வு பதாகைகளை மாணவ, மாணவியர் ஏந்திச் சென்றனர்.
     மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.திவாகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் நா.அருள்ஜோதி அரசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் து.கணேஷ்மூர்த்தி, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய கோட்ட பொறியாளர் வி.கோபாலகிருஷ்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சடையப்பன், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) செல்வக்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கோபிநாத் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
     ஆட்டையாம்பட்டியில்...
     இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை பேரூராட்சி சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா விஜய கணேசன் தொடக்கி வைத்தார். இதில் கே.கே. நகர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், கல்பாரப்பட்டி, கே.புதுப்பாளையம் அரசினர் நடுநிலைப் பள்ளியில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
     விநாயக மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லூரியில் தண்ணீர் தின விழா, மரம் நடுவிழா மற்றும் மழைநீர் சேகரிப்பு பேரணி உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் கல்லூரியின் முதல்வர் ஆ.நாகப்பன் தலைமை வகித்தார். இதில், மழை நீர் சேகரிப்பு மற்றும் நீர் பாதுகாப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மா, நாவல், புங்கன் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மாணவ, மாணவியர் நட்டனர். பின்னர் சேலம் சூரமங்கலம் பகுதியில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி
     நடத்தினர்.
     வாழப்பாடியில்...
     வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டி கலைமகள் வித்யாமந்திர் பள்ளி சார்பில் நடைபெற்ற பேரணியை தாளாளர் எஸ்.எஸ்.சதீஷ்குமார் தொடங்கி வைத்தார். மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்த பதாகைகளை கையில் ஏந்தியடி, மாணவ-மாணவியர் முக்கிய வீதிகளில் பேரணியாகச் சென்று விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
     வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சார்பில், பள்ளித் தலைமையாசிரியை சத்தியக்குமாரி தலைமையில் நடைபெற்ற பேரணியில், வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயலட்சுமி மற்றும் ஆசிரியைகள், மாணவ-மாணவியர் கலந்துகொண்டனர். வாழப்பாடி அண்ணா நகர் காலனி தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியை ஷபீராபானு தலைமையிலும், பெத்தநாயக்கன்பாளையத்தை அடுத்த பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியை இரா.இந்திரா தலைமையிலும் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
     சங்ககிரியில்...
     சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தேவண்ணகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற பேரணியை பள்ளித் தலைமையாசிரியர் (பொ) ஆர்.முருகன் தொடக்கி வைத்து, மழைநீர் சேகரிப்பதன் அவசியம், சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்தல், மரக்கன்றுகள் நடுதல், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்றார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai