Enable Javscript for better performance
பயனற்ற இடங்களில் மரக் கன்றுகள் நட நடவடிக்கை: ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    சேலம் மாநகராட்சியில் பயன்படாத வகையில் உள்ள இடங்களில் மரக் கன்றுகள் நட்டு நகருக்குள் வனம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் சி.அ.ராமன் தெரிவித்தார்.
     சேலம் மாநகராட்சிக்குள்பட்ட கொண்டலாம்பட்டி மண்டலம் சீலநாயக்கன்பட்டி நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மைய வளாகத்தில், நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் ஆயிரம் மரக் கன்றுகள் நடப்பட்டு, "நகருக்குள் வனம்' அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் புதன்கிழமை தொடக்கி வைத்தார். விழாவுக்கு மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் முன்னிலை வகித்தார்.
     இதுகுறித்து விழாவில் ஆட்சியர் பேசியது: சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், நகர் பகுதிக்குள் வனங்கள் அமைப்பது மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்குவதோடு, மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் மரக் கன்றுகள் நட்டு நகருக்குள் வனம் அமைக்கும் பணிகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன.
     தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலங்களில் மழைநீரை சேகரிப்பதோடு, எதிர்காலங்களில் நகர் புறங்களில் வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு, நகருக்குள் வனம் அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. குறைந்த நிலப்பரப்பில் மரங்களை நடுவதால் அதிகபட்சமான கரியமில வாயுவை உள்வாங்கி ஆக்ஸிஜனை வாயுமண்டலத்தில் விடுவிக்கும். மழைநீரை அடர்ந்த வனங்களில் சேமிப்பது போல் நகர்புற வனங்களில் மழைநீரை சேமித்திட முடியும்.
     மேலும் காற்றில் உள்ள ஈரப்பதம் குறையாது. இந்த நிலையில், புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்ட நகருக்குள் வனத்தில் நாவல்-195, தேக்கு-150, புங்கை-150, சில்வர்ஓக்-130, பூவரசு-50, சிசு-50, வேம்பு-90, பலா-20, எலுமிச்சை-20, கொய்யா-20, மாதுளை-20, நெல்லி-20, சந்தனம்-5, சவுக்கு-40 மற்றும் நீர்மருது-40 என மொத்தம் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.
     மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பயன்படாத வகையில் உள்ள இடங்களைத் தேர்வு செய்து, இதுபோன்ற மரக் கன்றுகளை நட்டு நகருக்குள் வனங்கள் அமைப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும். மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் அமைக்கப்படும் இதுபோன்ற நகருக்குள் வனப் பகுதிகளை ஈஸி பாரஸ்ட் அமைப்பினை சேர்ந்த எஸ்.ராமசந்திரன், ஜி.கார்வேந்தன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஓர் ஆண்டு காலத்துக்கு இலவசமாக பராமரித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பின்னர் ஒப்படைப்பார்கள் என்றார். 
     விழாவில், மாநகர பொறியாளர் அ.அசோகன், உதவி ஆணையர் ப.ரமேஷ்பாபு, உதவி செயற்பொறியாளர் ஆர். செந்தில்குமார், சுகாதார அலுவலர்கள் எம்.சித்தேஸ்வரன், எ.கோபிநாத், டி.ஆனந்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai