எட்டுவழி சாலைத் திட்டத்தால் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி
By DIN | Published On : 29th July 2019 08:41 AM | Last Updated : 29th July 2019 08:41 AM | அ+அ அ- |

எட்டுவழி சாலைத் திட்டத்தினால் உயிரிழந்த விவசாயிகளுக்கு சேலம் விவசாயிகள் குடும்பத்தோடு ஒன்று திரண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.
சேலம்- சென்னை இடையே அமைக்கப்படும் எட்டுவழி சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே காவல் துறையினரின் உதவியோடு விவசாய நிலங்களை அளவீடு செய்து நிலத்தை கையகப்படுத்தியதைப் பார்த்தும், அரசின் நடவடிக்கையால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பால் விவசாயிகள் ஏழு பேர் உயிரிழந்ததை நினைவு கூரும் வகையில், அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பூலாவரி அருகே தங்களது குடும்பத்தோடு திரண்ட விவசாயிகள் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஊர்வலமாக வந்தனர்.
தொடர்ந்து விவசாயத் தோட்டத்தில், உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய அவர்கள், தீபம் ஏற்றி தங்களது வருத்தத்தைத் தெரிவித்து கொண்டனர்.
மேலும் உயிர் இழந்தவர்களுக்காக, சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து எட்டு வழி சாலை எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:
எட்டுவழி சாலைத் திட்டத்தினால் கடந்த ஓராண்டில் ஏழு பேர் உயிரிழந்தனர்.
விவசாயிகளின் கருத்தை ஏற்காமலும், அவர்களின் எதிர்ப்பைக் கண்டு கொள்ளாமலும், தமிழக அரசு தொடர்ந்து இந்தத் திட்டத்தைக் கொண்டு வர முயற்சித்து வருகிறது. இந்தத் திட்டத்தை மாற்று வழியில் கொண்டு செல்லலாம் என்றனர்.