ஆக.4 இல் அரசுப் பொருள்காட்சி துவக்கம்: முதல்வர் பங்கேற்பு

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகஸ்ட் 4 ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் அரசுப் பொருள்காட்சியைத் தொடக்கி வைக்கிறா

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகஸ்ட் 4 ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் அரசுப் பொருள்காட்சியைத் தொடக்கி வைக்கிறார்.
 சேலம் மாநகராட்சி மைதானத்தில் சேலம் அரசுப் பொருள்காட்சி விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதுதொடர்பாக ஆட்சியர் சி.அ. ராமன் கூறியதாவது: தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெறவுள்ள சேலம் அரசுப் பொருள்காட்சியை வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடக்கி வைக்கவுள்ளார்.
 விழாவினை சிறப்பாக மேற்கொள்ளும் பொருட்டு அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும், விழாக்களில் வழங்கப்பட வேண்டிய நலத்திட்ட உதவிகள் குறித்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம் அரசுப் பொருள்காட்சியில் அரசின் கொள்கைகள், மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், 27 அரசுத் துறை அரங்குகளும், 11 அரசு சார்பு நிறுவனங்களின் அரங்குகளும் அமைக்கப்படவுள்ளன. அரசுப் பொருள்காட்சி அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அலுவலர்கள் தங்களது துறைகளின் சார்பில் மேற்கொள்ளும் அரங்கு அமைக்கும் பணிகளை விரைவுப்படுத்தித் துவக்க நாளுக்கு ஒரு நாள் முன்னதாக அரங்கினை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொருள்காட்சி துவக்க நாளில் முதல்வரால் வழங்கவுள்ள அரசுத் நலத்திட்ட உதவிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். காவல் துறையின் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், பொதுப்பணித் துறையின் சார்பில் மேடைகள் அமைக்கும் பணியும், மாநகராட்சியின் சார்பில் தூய்மைப் பணியும் மேற்கொள்ளப்பட வேண்டும். அனைத்துத் துறை அலுவலர்களும் பொருள்காட்சி அரங்குகள் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்றார். ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. திவாகர், மாவட்ட வன அலுவலர் பெரியசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் ந. அருள் ஜோதி அரசன், மகளிர் திட்ட அலுவலர் செல்வக்குமார், இணை இயக்குநர் வேளாண்மை கமலா, கூட்டுறவு சங்கங்கள் இணைப் பதிவாளர் ராஜேந்திர பிரசாத், உதவி இயக்குநர் ஊராட்சிகள் கோபிநாத், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சரவணன், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மருத்துவர் க.பூங்கொடி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com