குறுவை பாசனத்துக்கு மேட்டூர் அணை திறப்பு இல்லை: டெல்டா விவசாயிகள் கவலை

மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படாததால், காவிரி டெல்டா விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படாததால், காவிரி டெல்டா விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மேட்டூர் அணை பாசனம் மூலம் 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.  குறுவை, சம்பா, தாளடிப் பயிர்களுக்கு ஜூன் 12 முதல் ஜனவரி 28 வரை 230 நாள்களுக்கு 330 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும்.   மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால்,  பருவ மழையை எதிர்நோக்கி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும்.
மேட்டூர் அணை வரலாற்றில் நடப்பு நீர்ப் பாசன ஆண்டில் தொடர்ந்து 8-ஆவது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-இல் (புதன்கிழமை) தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் முப்போக சாகுபடி என்பது கானல் நீராகி வருகிறது.
            காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையிலும்,  இறுதி தீர்ப்பின் அடிப்படையிலும் கர்நாடகம் தமிழகத்துக்கு உரிய காவிரி நீரைத் தர மறுத்து வந்தது.  இதனையடுத்து,  உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டதன் பேரில்,  உச்ச நீதிமன்றமும் தமிழகத்துக்கு உரிய நீரை வழங்க உத்தரவிட்டது.  ஆனாலும், கர்நாடகம் தண்ணீர் தர மறுத்து வந்தது.  தற்போது காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவுப்படியும் கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க மறுத்து வருகிறது.
பல ஆண்டுகள் கர்நாடகம் தண்ணீர் வழங்காமல் இருந்த போதும்,  பருவமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி, கர்நாடக அணைகளின் பாதுகாப்புக் கருதி காவிரியில் வெளியேற்றப்படும் உபரி நீர் மேட்டூர் அணைக்கு வந்து பாசனத்துக்குக் கைகொடுத்தது.  மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்காக கர்நாடக அரசு மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.  மேலும், காவிரி நதிநீர்ப் பங்கீடு பிரச்னையில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி தமிழக அரசு ஸ்திரமான முடிவுகளை எடுத்தால் மட்டுமே காவிரி நீர்ப் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கமுடியும் என்பது தமிழக விவசாயிகளின் வேண்டுகோளாக உள்ளது.
காவிரி நீர் கிடைக்காவிட்டால் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளும், விவசாயக் கூலிகளும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com