மீட்கப்பட்ட 258 சிறார் தொழிலாளர்கள் கல்வி கற்கின்றனர்: ஆட்சியர்

சேலம் மாவட்டத்தில் மீட்கப்பட்ட 258 சிறார் தொழிலாளர்கள் கல்வி கற்று வருகின்றனர் என ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.

சேலம் மாவட்டத்தில் மீட்கப்பட்ட 258 சிறார் தொழிலாளர்கள் கல்வி கற்று வருகின்றனர் என ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தேசிய சிறார் தொழிலாளர் திட்டம் மற்றும் தொழிலாளர் துறை சார்பாக சிறார் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழா ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் பேசியது: சேலம் மாவட்டத்தில் சிறார் தொழிலாளர் எதிர்ப்பு தின விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் முக்கியக் குறிக்கோள் அனைத்து விதமான சிறார் தொழிலாளர்கள் முறைகளை ஒழிப்பதாகும்.
14 வயதுக்குள்பட்ட சிறார் மட்டும் அல்லாமல் 15 முதல் 18 வரை உள்ள சிறார் வளரிளம் பருவத்தில் உள்ள சிறார்களும்தான் என்பதை சமுதாயத்தில் அனைவரும் அறியும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறார் தொழிலாளர் குடும்பங்களுக்கு தேவையான உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
சேலம் மாவட்டத்தில், வேடுகாத்தாம்பட்டி, வி.எம்.நகர், மணியனூர், நரசோதிப்பட்டி, பள்ளப்பட்டி, பஞ்சதாங்கி ஏரி, திருவாகவுண்டனூர், தளவாய்ப்பட்டி, களரம்பட்டி, சேலத்தாம்பட்டி, பனங்காடு, நரசுக்காடு, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, எடப்பாடி காந்திநகர் உள்ளிட்ட 15 சிறார் தொழிலாளர் பயிற்சி பள்ளிகளில், கடந்த இரண்டு ஆண்டுகள் கல்வி கற்ற 180 மாணவர்கள் தொடர் கல்விக்காக அருகில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 
2018 - 2019-ஆம் ஆண்டு 164 புதிய மாணவர்கள் சேர்க்கப்பட்டு மொத்தம் 258 மாணவர்கள் தொழிலாளர் பயிற்சி மற்றும் கல்வி கற்று வருகின்றனர். அந்தப் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமல்லாமல் அனைத்து உதவிகளும் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
அதுமட்டுமல்லாமல், இரண்டு சக்கர வாகன பணிமனைகள் மற்றும் வெள்ளிப் பட்டறைகள் சிறார் தொழிலாளர்கள் அமர்த்தப்படுவதாக தகவல் வந்ததன் பேரில், உரிமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து சிறார் தொழிலாளர்கள் அமர்த்தப்படுவதில்லை என்று உறுதிமொழி பத்திரம் தற்போது சமர்ப்பித்துள்ளனர்.
சிறார் தொழிலாளர்கள் குறித்து கவனத்துக்கு கொண்டு வந்தால், அவர்களை மீட்டு சிறார் தொழிலாளர் பயிற்சி மையங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நுழைவு வாயிலில் சிறார் தொழிலாளர் முறை எதிப்பு தின மனிதச் சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். 
நிகழ்ச்சியில், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பா.கோட்டீஸ்வரி, சிறார் தொழிலாளர் பாதுகாப்பு திட்ட அலுவலர் ஆர்.நிர்மலா, குழந்தை பாதுகாப்பு அலுவலர் செல்வம் மற்றும் மாணவர்கள், வெள்ளிப் பட்டறை உரிமையாளர்கள், இருசக்கர பணிமனை உரிமையாளர்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
சங்ககிரியில்...
சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் மு.அமிர்தலிங்கம் தலைமை வகித்தார். வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வகுமார், வட்டாட்சியர் கே.அருள்குமார், சமூக நலத்துறை வட்டாட்சியர் கோவிந்தராஜன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஜெயக்குமார், தேர்தல் துணை வட்டாட்சியர் சிவராஜ், மண்டல துணை வட்டாட்சியர் மாணிக்கம் உள்ளிட்ட வருவாய்த் துறை அலுவலர்கள், அரசுத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர்  உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 
ஆத்தூரில்...
பெத்தநாயக்கன்பாளையம், ஒன்றியம் மண்ணூர் மலை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிறார் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின பேரணி தலைமையாசிரியர் முருகன் தலைமையில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு, ஆசிரியர்களும், மாணவர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 
தம்மம்பட்டியில்...
கெங்கவல்லி அருகே கடம்பூர் அரசு தொடக்கப் பள்ளியில், கெங்கவல்லி வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுஜாதா தலைமையில் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் செல்வம் வரவேற்றார். இதில், சிறார் தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதேபோல் கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள 60-க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
எடப்பாடியில்...
எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் கேசவன் தலைமை வகித்தார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.திவாகர், உறுதிமொழியினை வாசிக்க அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர்.
வாழப்பாடியில்...
வாழப்பாடி அண்ணா நகர் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், தலைமையாசிரியை ஷபீராபானு தலைமையில், வட்டார வள மைய மேற்பார்வையாளர் கோகிலா, ஆசிரியைகள் மற்றும் மாணவ-மாணவியர் உறுதிமொழி ஏற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com