காவல் ஆய்வாளர் மிரட்டியதாகக் கூறி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற ஓட்டுநர்
By DIN | Published On : 18th June 2019 08:51 AM | Last Updated : 18th June 2019 08:51 AM | அ+அ அ- |

நிலப் பிரச்னை தொடர்பான புகாரில் காவல் ஆய்வாளர் மிரட்டியதாகக் கூறி ஓட்டுநர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர்.
சேலம் சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜன். இவர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவியும், பிரணவ் ராஜமால்யா என்ற 2 மகன்களும் உள்ளனர்.
இதனிடையே தேவராஜனுக்கும் வீட்டின் அருகே உள்ளவருக்கும் இடையே வழித்தடம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், எதிர் தரப்பினர் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அண்மையில் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் தேவராஜன் குடும்பத்தினரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது காவல் நிலைய ஆய்வாளர், தேவராஜன் குடும்பத்தினரை தகாத வார்த்தையில் பேசியதாகவும், வழித்தடத்தை உடனடியாக மூடவில்லையெனில் போக்சோ சட்டத்தில் கைது செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த தேவராஜன், தனது மனைவி சரண்யா, தந்தை பழனிசாமி, தாய் கனகவல்லி மற்றும் குழந்தைகள் இருவர் என 6 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து நுழைவு வாயில் முன் நின்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
உடனே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள், தீக்குளிக்க முயன்றவர்கள் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்களை சேலம் நகரக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.