சேலத்தில் 6 மாதங்களில் 3,269 கடைகளில் 11 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்: ரூ. 13 லட்சம் அபராதம் வசூல்

சேலம் மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் கடந்த 6 மாதங்களில் 3,269 கடைகளில் 11 ஆயிரத்து 866 கிலோ அளவிலான தடை

சேலம் மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் கடந்த 6 மாதங்களில் 3,269 கடைகளில் 11 ஆயிரத்து 866 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் பறிமுதல் செய்து, ரூ. 13 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
தமிழக அரசின்  ஆணைப்படி 1.1.2019 முதல்  ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத தன்மை கொண்ட நெகிழி பொருள்கள் பயன்படுத்துவதை, விற்பனை செய்வதை தடுக்க, சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் 5 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ரெ. சதீஷ் உத்தரவின்பேரில் இக் கண்காணிப்பு குழுவினரால் ஜனவரி 2 ஆம் தேதி முதல் ஜூன் 17-ஆம் தேதி வரையிலான நாள்களில் மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் உள்ள இனிப்பகங்கள், உணவகங்கள், பேக்கரிகள், மொபைல் கடைகள், தேநீர் விடுதிகள், துணிக் கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் திடீர் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் ஜனவரி 2 முதல் ஜூன் 16-ஆம் தேதி வரை  சூரமங்கலம் மண்டலத்தில் 775 கடைகளில் 3,600 கிலோ நெகிழி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 2 லட்சத்து 6,350 அபராதமும் வசூலிக்கப்பட்டது.
அஸ்தம்பட்டி மண்டலத்தில் 619 கடைகளில் 1217 கிலோ நெகிழி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 3 லட்சத்து 29,900 அபராதம் வசூலிக்கப்பட்டது. அம்மாபேட்டை மண்டலத்தில் 934 கடைகளில் 4503 கிலோ நெகிழி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 4 லட்சத்து 17,400 அபராதம் வசூலிக்கப்பட்டது. கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 917 கடைகளில் 2,431 கிலோ நெகிழி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 2 லட்சத்து 75,300 அபராதம் வசூலிக்கப்பட்டது. 
மொத்தம் நான்கு மண்டலங்களில்  3245 கடைகளில் 11751 கிலோ நெகிழி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 12 லட்சத்து 28,950 அபராதம் வசூலிக்கப்பட்டது. இதனிடையே திங்கள்கிழமை (ஜூன் 17) நடைபெற்ற தணிக்கைகளில் நான்கு மண்டலங்களில் மொத்தம் 24 கடைகளில் 115 கிலோ நெகிழி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 82,800 அபராதம் வசூலிக்கப்பட்டது.
இக் கண்காணிப்புக் குழுவினர் தினந்தோறும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களிலும் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதை, விற்பனை செய்வதைத் தடுக்க, தொடர்ந்து தணிக்கை மேற்கொள்வார்கள் என ஆணையர் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com