அதி நவீனமாகிறது வாழப்பாடி அரசு கால்நடை மருத்துவமனை

வாழப்பாடியில் கடந்தாண்டு தரம் உயர்த்தப்பட்ட அரசு கால்நடை மருத்துவமனையில், டிஜிட்டல்

வாழப்பாடியில் கடந்தாண்டு தரம் உயர்த்தப்பட்ட அரசு கால்நடை மருத்துவமனையில், டிஜிட்டல் எக்ஸ்-ரே மற்றும் நடமாடும் ஸ்கேனிங் இயந்திரங்கள் நிறுவுப்படுகின்றன. இதனால், அதிநவீன வசதிகளுடன் வீட்டு விலங்குகள் மற்றும் கால்நடைகளுக்கு உயரிய சிகிச்சை கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் ஆடு, கறவை மாடுகள், கோழி, பன்றி உள்ளிட்ட கால்நடைகளையும், நாய், பூனை ஆகிய வீட்டு விலங்குகளையும் வளர்த்து வருகின்றனர். கால்நடைகள் மற்றும் வீட்டு விலங்குகளுக்கு நோய்த் தடுப்பூசி போடுதல், சினை பரிசோதனை, செயற்கை கருவூட்டல் உள்ளிட்ட சிகிச்சை அளிக்கும் நோக்கில் 20 ஆண்டுகளுக்கு முன் கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் வாழப்பாடியில் கால்நடை கிளை நிலையம் அமைக்கப்பட்டது.  வாழப்பாடி பகுதி விவசாயிகளின் வேண்டுகோளின் பேரில், தனியார் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்த அரசு கால்நடை மருந்தகத்துக்கு, கடந்த 2012-இல் வாழப்பாடி பேரூராட்சி மங்கம்மா நகரில் அரசு கல்லாங்குத்து புறம்போக்கு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு விசாலமான கட்டடம் கட்டப்பட்டது. 
இதனையடுத்து, கால்நடை மருந்தகத்துக்கு சிகிச்சைக்கு வரும் கால்நடைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததால், கால்நடைகளுக்கு அறுவை சிகிச்சைகள் மற்றும் நவீன முறையில் மேல்சிகிச்சை அளிக்கும் வகையில், வாழப்பாடி கால்நடை மருந்தகத்தை, கடந்த 2018 ஏப். 28-ஆம் தேதி, தமிழக அரசு கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்தியது.
இதனைத் தொடர்ந்து, வாழப்பாடி கால்நடை மருத்துவமனைக்கு உதவி இயக்குநர் நிலையிலுள்ள மூத்த கால்நடை மருத்துவர் நியமிக்கப்பட்டார். இந்த மருத்துவமனையில் ஏறக்குறைய ரூ.50 லட்சத்தில் டிஜிட்டல் எக்ஸ்-ரே இயந்திரம், நடமாடும் ஸ்கேனிங் இயந்திரம் உள்ளிட்ட அதிநவீன கருவிகள் நிறுவுவதற்கு கால்நடை பராமரிப்புத் துறை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
வாழப்பாடி கால்நடை மருத்துவமனையில்  நவீன கருவிகளை பொருத்தி தரம் உயர்த்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதால், கால்நடைகள் மற்றும் வீட்டு விலங்குகளுக்கு உயரிய சிகிச்சைக்கு வழிவகை கிடைத்துள்ளது. இதனால் வாழப்பாடி பகுதி விவசாயிகளும், வீட்டு விலங்குகள் வளர்ப்போரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வாழப்பாடி கால்நடை மருத்துவமனை உதவி இயக்குநர் அய்யாசாமி கூறியது: வாழப்பாடி அரசு கால்நடை மருந்தகம் கடந்தாண்டு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது இந்த மருத்துவமனைக்கு கால்நடை பராமரிப்புத் துறை வாயிலாக டிஜிட்டல் எக்ஸ்-ரே, ஸ்கேனிங் இயந்திரங்கள் பொருத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், வாழப்பாடி பகுதி விவசாயிகள் வளர்த்து வரும் கால்நடைகள் மற்றும் வீட்டு விலங்குகளுக்கு அதிநவீன வசதிகளுடன் சிகிச்சை அளிக்க முடியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com