கல்வராயன் மலைக் கிராமங்களில் "பலா' விளைச்சல் பாதிப்பு
By DIN | Published On : 24th June 2019 10:06 AM | Last Updated : 24th June 2019 10:06 AM | அ+அ அ- |

கல்வராயன் மலைக் கிராமங்களில், நிகழாண்டு எதிர்பார்த் கோடை மழையின்றி அனல் காற்று வீசியதால் "பலா' விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பலாப்பழம் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.
சேலம் மாவட்டம், சின்ன கல்வராயன் மலை, பெரிய கல்வராயன் மலை, அருநூற்றுமலை, சந்துமலை, நெய்யமலைக் கிராமங்களில், நீண்ட கால பலன் தரும் பலா மரங்களை, பாரம்பரிய முறையில் மலைவாழ் பழங்குடியின மக்கள் வளர்த்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் தமிழ் மாதமான சித்திரையில் துவங்கி ஆடி வரை 4 மாதங்களுக்கு பலாப்பழம் விளைகிறது. நிகழாண்டு கல்வராயன் மலைக் கிராமங்களில் பலா மரங்கள் பிஞ்சு விடும் தருணத்தில் கோடை மழை பெய்யவில்லை.
இதுவரை இல்லாத அளவுக்குக் கடுமையான அனல் காற்று வீசியதால் ஆயிரக்கணக்கான மரங்களில் பலாப் பிஞ்சுகள் முதிராமலேயே உதிர்ந்து விட்டன.
இதனால் நிகழாண்டு "பலா' விளைச்சல் பாதியாக குறைந்து போனது. தற்போது அறுவடை தொடங்கிய நிலையில் விற்பனைக்கு வரும் பலாப்பழங்களும் அளவில் சிறுத்து காணப்படுகிறது. இந்த நிலையில் உள்ளூர் தேவைக்கே பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், கல்வராயன் மலை பலாப்பழங்கள் இரு மடங்காக விலை உயர்ந்துள்ளது.
கடந்தாண்டு ரூ. 80 முதல் ரூ.150 வரை விலைபோன பழங்கள் தற்போது ரூ.150 முதல் ரூ.300 வரை விலை போகிறது.
இருப்பினும் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழங்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் என்பதால் கல்வராயன்மலை பலாப்பழங்களை, வாழப்பாடி, பேளூர், ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் பகுதி மக்கள், கருமந்துறை தினசரி மற்றும் வாரச் சந்தையிலும், மலைக் கிராமங்களுக்கே நேரடியாகச் சென்று விவசாயிகளிடமும் கொள்முதல் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து கருமந்துறை பலா விவசாயி ஆண்டி என்பவர் கூறியதாவது:
சராசரியாக 20 முதல் 40 பழங்கள் விளையும் நாட்டுரக பலா மரங்களில் 10 முதல் 20 பலாப்பழங்கள் கூட விளையவில்லை. இதனால், எதிர்பார்த்த அளவிற்கு பலா மகசூலும் வருவாயும் கிடைக்கவில்லை என்றார்.