சாலையை செப்பனிட கோரிக்கை
By DIN | Published On : 25th June 2019 09:46 AM | Last Updated : 25th June 2019 09:46 AM | அ+அ அ- |

சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட சங்ககிரி மலையடிவாரத்திலிருந்து பவானி பிரதான சாலை செல்லும் வழியில் உள்ள சாலையை செப்பனிட வேண்டுமென பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பேரூராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சங்ககிரி பவானி பிரதான சாலையில் இருந்து மலையடிவாரம் செல்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கான்கீரிட் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டன. இந்த சாலையை சங்ககிரி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர், தனியார் பள்ளி, கல்லூரி வேன்கள், தனியார் நூற்பாலைக்கு செல்லும் வேன்கள், மலைக்கு செல்லும் பக்தர்கள், மலையடிவாரத்தில் உள்ள பள்ளி வாசல்களுக்கு தொழுவதற்கு செல்லும் இஸ்லாமியர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கான்கீரிட் சாலை சேதமடைந்து குண்டும் குழியாக உள்ளது. வழிநெடுகிலும் கருவேல முள்செடிகள் வளர்ந்து சாலையை மறைத்து வருவதால், இருசக்கர வாகனங்கள், வேன்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ,இச்சாலையில் ஒரு புறம் மட்டும் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாயில் ஆங்காங்கே கற்கள் வைத்து அடைக்கப்பட்டுள்ளதால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. மேலும், நெகிழிப் பைகள் குவியலாகக் கிடப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.
எனவே, சிதிலமடைந்துள்ள சாலையை செப்பனிட்டும், சாலையை மறைத்து வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றியும், கழிவுநீர் கால்வாயில் உள்ள அடைப்புகளை எடுத்து கழிவுநீர் தடையில்லாமல் செல்வதற்கும் சங்ககிரி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.