சுடச்சுட

  

  சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். 
  மாநில நெடுஞ்சாலைத் துறை சங்ககிரி உதவி செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் உள்ள கிணற்றினை பார்வையிட்ட ஆட்சியர், நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு இந்த கிணற்று நீரை வழங்கமுடியுமா என சோதனை செய்து, அதற்கான பணிகளை விரைந்து முடிக்குமாறு சங்ககிரி பேரூராட்சி செயல் அலுவலருக்கு அறிவுறுத்தினார்.
  பின்னர் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் இப்பகுதியில் 15 நாள்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் காவிரி குடிநீரை பலர் மோட்டார் வைத்து உறிஞ்சுவதால், சீராக கிடைப்பதில்லை என ஆட்சியரிடம் தெரிவித்தனர். அதையடுத்து, சோதனை செய்து மோட்டார்களை பறிமுதல் செய்யவும், முறையற்ற இணைப்புகளை துண்டிக்கவும் பேரூராட்சி செயல் அலுவலருக்கு   ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், இந்த கிணற்று நீரை பயன்படுத்த முடியும் என்றால், இப்பகுதியில் குழாய் அமைத்து, கூடுதலான நேரம் இப்பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு வலியுறுத்தினார். மேலும், அப்பகுதியில் குழுமியிருந்த பொதுமக்களிடம் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
  பின்னர் வடுகப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட தாதப்பட்டி, பூச்சம்பட்டி, அன்னதானப்பட்டி கிராமத்துக்குள்பட்ட ஊஞ்சானூர்,  ஒலக்கசின்னானூர் உள்ளிட்ட கிராமப் பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். வடுகப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் மாணவ, மாணவியரிடத்தில் கல்வி கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார். 
  ஆய்வின் போது, சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் அருள்ஜோதி அரசன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் எஸ்.கே.முருகன், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் மு.அமிர்தலிங்கம், வட்டாட்சியர் கே.அருள்குமார், மாநில நெடுஞ்சாலை சங்ககிரி உதவி செயற் பொறியாளர் மலர்விழி, ஊராட்சி ஒன்றிய ஆணையர் எம்.அனுராதா, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) என்.எஸ்.ரவிச்சந்திரன், பேரூராட்சி செயலர் அலுவலர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
  ஆட்டையாம்பட்டியில்...
  மகுடஞ்சாவடி ஒன்றிய அலுவலகத்தில் கிராமப்புற பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்பாடு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் ரோகிணி தலைமையில் நடைபெற்றது.
  இதில் அனைத்து அரசுத் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். மேலும், மகுடஞ்சாவடி ஒன்றியப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் அதற்கு மாற்று வழி குறித்தும், சுகாதாரம், பொது சுகாதாரம், குழந்தைகள் நலம், வேளாண் உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சி குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai