சீர்மிகு நகர திட்டத்தின் 4-ஆம் ஆண்டில் ரூ.943 கோடியில் பணிகள்: மாநகராட்சி ஆணையர்

சீர்மிகு நகர திட்டத்தின் 4-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சேலம் மாநகராட்சியில் ரூ.943.77 கோடியில் திட்டப்

சீர்மிகு நகர திட்டத்தின் 4-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சேலம் மாநகராட்சியில் ரூ.943.77 கோடியில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் கடந்த 2018 டிச. 13-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சீர்மிகு நகர திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்பேரில், எல்.இ.டி. விளக்குகள் பொருத்துதல், நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையம் அமைத்தல், தற்காலிக பேருந்து நிலையம் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கான வாகனங்கள் வழங்குதல், சீர்மிகு மரம் அமைத்தல், காற்று தரம் கண்காணிப்பு அமைப்பு என 6 பணிகள் ரூ.37.54 கோடியில் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும், ரூ.92.13 கோடியில் பழைய பேருந்து நிலையம் அதிநவீன இரண்டு அடுக்கு பேருந்து நிலையமாக மாற்றி அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
ரூ.20.45 கோடியில் எருமாபாளையம் திடக்கழிவு கிடங்கினை நவீன முறையில் சுகாதாரமான பசுமை தளமாக மாற்றியமைக்கும் பணி, ரூ.18.08 கோடியில் திருமணிமுத்தாற்றின் கரைகளை மேம்படுத்தும் பணிகளும், ரூ.13.50 கோடியில் ஆனந்தா பாலம் அருகில் மற்றும் ரூ.7.80 கோடியில் விக்டோரியா வணிக வளாகம் ஆகிய இடங்களில் 4 தளங்களை கொண்ட அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
ரூ.30 கோடியில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை, ரூ.8.70 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மற்றும் ஓடை மேம்பாட்டுப் பணிகள், ரூ.5.70 கோடியில் கோட்டை பழைய மார்க்கெட் சாலையில் வணிக வளாகம் அமைக்கும் பணிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு பணிகள் தொடங்க உள்ளன.
மாநகர் பகுதிகளுக்கு தினந்தோறும் குடிநீர் வழங்கல், வ.உ.சி. மார்க்கெட் மேம்பாடு, பெரியார் பேரங்காடி மேம்பாடு, போஸ் மைதானம் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.113.36 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஒப்புதல் பெறுவதற்காக தொழில்நுட்ப அனுமதி கோரி அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 
மேலும், நேரு கலையரங்கம் மேம்பாடு, தகவல் அறிவிப்பு பலகைகள், சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்தல் போன்ற பணிகளுக்காக ரூ.230.32 கோடியில் திட்ட அறிக்கை, குடிநீர் வழங்குதல் பகுதி 2 மற்றும் பாதாள சாக்கடை கழிவுநீர் குழாய்கள் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்வதற்காக ரூ.265.08 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நிர்வாக அனுமதிக்காக அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 
அனைத்துப் பணிகளையும் குறிப்பிட்ட கால அளவுக்குள் முடித்து பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது என மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com