வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த பாதிரியார் இறப்பு: சடலத்தை எடுக்கவிடாமல் பாதிக்கப்பட்டோர் முற்றுகை

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த பாதிரியார் இறந்ததையடுத்து, சடலத்தை

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த பாதிரியார் இறந்ததையடுத்து, சடலத்தை எடுக்கவிடாமல் பாதிக்கப்பட்டவர்கள் அவரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம்,  தம்மம்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட கோனேரிப்பட்டியைச் சேர்ந்தவர் சார்லஸ். இவர் கத்தோலிக்க திருச்சபையில் பாதிரியராகப் பணிபுரிந்த போது, கருத்து வேறுபாடு காரணமாக பாதிரியார் பணியில் இருந்து வெளியேறி,  உறவினர் பெண்ணை திருமணம் செய்து கொண்டு சேலத்தில் கடந்த 20 ஆண்டுகளாக குடியிருந்து வந்தார்.
 இந்த நிலையில்,  வெளிநாட்டில் பாதிரியராக சார்லஸ் பணிபுரிந்த போது,  திருச்சியைச் சேர்ந்த ஜோசப் எபினேசர் மற்றும் கிளமன்ட் ஆகியோருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அதன் பின்னர்,  சொந்த ஊருக்கு வந்த பாதிரியார் சார்லஸ், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக சேலம், தருமபுரி, பெரம்பலூர், திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கிறிஸ்தவர்களிடம்  ரூ.ஒரு லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை 150-க்கும் மேற்பட்டோரிடம் வாங்கிக் கொண்டு,  கடந்த இரண்டு ஆண்டுகளாக யாரையும் வெளிநாட்டிற்கு அனுப்பாமல் சுமார் ரூ.2 கோடி வரை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. 
இந் நிலையில், பாதிரியார் சார்லஸ் திங்கள்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தார்.  அதையடுத்து, சார்லஸின் உடலை அவரது சொந்த ஊரான கோனேரிப்பட்டிக்கு நல்லடக்கம் செய்ய கொண்டு வந்தனர்.
அப்போது, சார்லஸ் இறந்ததை அறிந்த பாதிக்கப்பட்டோர் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் செவ்வாய்க்கிழமை சார்லஸ் வீட்டுக்கு வந்து அவரது உடலை எடுக்க விடாமல் வீட்டின் முன் முற்றுகையிட்டு பணத்தைக் கேட்டு தர்னாவில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தம்மம்பட்டி போலீஸார்,  தர்னாவில் ஈடுபட்டவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர்.  பாதிக்கப்பட்டோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால்,  பணத்தை மீட்டுத் தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.  அதைத் தொடர்ந்து,  தர்னாவில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com