அம்மா உணவகத்தில் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
By DIN | Published On : 28th June 2019 08:46 AM | Last Updated : 28th June 2019 08:46 AM | அ+அ அ- |

ஆத்தூர் அம்மா உணவகத்தில் பணியாளர்கள் வியாழக்கிழமை காலை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆத்தூரில் அம்மா உணவகம் கிரைன் பஜாரில் அமைந்துள்ளது. இங்கு வேலை செய்யும் பணியாளர்கள் புதன்கிழமை மாலை நகராட்சி அலுவலகம் முன் தர்ஸை போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களை ஆத்தூர் நகர காவல் உதவி ஆய்வாளர் சங்கீதா சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தார்.
வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு அந்த பணியாளர்கள் உணவகத்துக்குள் சென்று வேலையை செய்து வந்தனர். காலை 6 மணியளவில் நகராட்சி மேலாளர், அலுவலர்கள் புதிதாக வேலையாட்களை அழைத்துக் கொண்டு வந்தனர். இதையடுத்து நகராட்சி ஆணையாளர் ஆர்.சரஸ்வதியும் வந்தார்.
நகராட்சி ஆணையாளர் பழைய ஆட்களை வெளியே செல்லும்படியும், புதிய ஆட்கள் வேலை செய்வார்கள் எனக் கூறினார். இதனால் பழைய பணியாளர்கள் வெளியேற மறுத்து வந்தனர்.மேலும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் வி. ராஜீ தலைமையில் காவல் ஆய்வாளர் கே. முருகேசன், உதவி ஆய்வாளர் சங்கீதா உள்ளிட்ட காவலர்கள் அங்கு சென்று பழைய பணியாளர்களிடம் சமாதானம் பேசினர். டிஎஸ்பி அலுவலகம் வாருங்கள் பேசிக் கொள்ளலாம் என கூறி காவலர்கள் உதவியுடன் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து பழைய பணியாளர்கள் கோட்டாட்சியர் அலுவலகம், டிஎஸ்பி அலுவலகம் சென்றனர். இருப்பினும் முடிவு எட்டப்படவில்லை.