இளைஞர் சாவில் மர்மம்: உறவினர்கள் மறியல்
By DIN | Published On : 28th June 2019 08:46 AM | Last Updated : 28th June 2019 08:46 AM | அ+அ அ- |

சேலத்தில் கிணற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழந்ததை தொடர்ந்து அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் வெண்ணங்குடி முனியப்பன் கோயில் அருகே தெய்வானை நகரைச் சேர்ந்தவர் கோபிநாத் (24). இவர், அழகாபுரம் காட்டூர் பகுதியில் இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார்.
இந்த நிலையில், கோபிநாத் புதன்கிழமை மாலை அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் தனது நண்பர்கள் 3 பேருடன் குளிக்கச் சென்றார்.பின்னர் நான்கு பேரும் கிணற்றில் இறங்கி குளிக்கும்போது எதிர்பாராத விதமாக கோபிநாத் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினரும், அழகாபுரம் போலீஸாரும் நிகழ்விடத்துக்கு விரைந்தனர். சுமார் 2 மணி நேர தொடர் போராட்டத்துக்கு பின் தீயணைப்பு வீரர்கள் கோபிநாத்தின் உடலை மீட்டனர். இதையடுத்து போலீஸார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர். அப்போது கோபிநாத்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது உடலை காண்பிக்க வலியுறுத்தியும் அவரது உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். உரிய விசாரணை நடத்தப்படும் என போலீஸார் உறுதியளித்ததை தொடர்ந்து அவரது உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.