சேலத்தில் 4 ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த கோயில் திறப்பு
By DIN | Published On : 02nd March 2019 08:33 AM | Last Updated : 02nd March 2019 08:33 AM | அ+அ அ- |

சேலம் அருகே வழிபாடு நடத்துவதில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த ஸ்ரீ சைல கிரீஸ்வரர் கோயில் வெள்ளிக்கிழமை காலை திறக்கப்பட்டது.
சேலத்தை அடுத்த, திருமலைகிரி ஊராட்சியில் ஸ்ரீ சைலகிரீஸ்வரர் என்ற சிவன் கோயிலும், பெருமாள் கோயிலும் அருகருகே உள்ளது.இந்தக் கோயில் சுமார் ரூ.1 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டு, 2015 மார்ச் 2 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட இருந்தது. அப்போது, கோயில் கும்பாபிஷேகம் தொடங்கி பூஜை மற்றும் வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு பிரிவினர் இடையே பிரச்னை ஏற்பட்டது.
இதையடுத்து இந்தக் கிராமத்தைச் சுற்றியுள்ள 21 கிராமத்துக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டது. இதைத்தொடர்ந்து இரு தரப்பினர் தொடர்ந்த வழக்கால் நான்கு ஆண்டுகளாக கோயில் பிரச்னை முடிவுக்கு வராமல் இருந்தது.
இப்பிரச்னைக்கு தீர்வு காண, சேலம் வருவாய் கோட்டாட்சியர் செழியன் தலைமையில் நடத்தப்பட்ட இருதரப்பு பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்பினரும் வழக்கை திரும்பப் பெறுவது என முடிவு செய்யப்பட்டது. அனைத்துப் பிரிவினரும், கோயிலில் வழிபடலாம் என்றும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை இரு தரப்பினரும் ஏற்று கையெழுத்திட்டனர். இதையடுத்து திருமலைகிரியில் இருந்த 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை சேலம் வருவாய் கோட்டாட்சியர் செழியன் தலைமையில் அதிகாரிகள் கோயிலின் பூட்டை திறந்து வைத்தனர். பிறகு பொதுமக்கள் கோயிலுக்கு சென்று வழி பட்டனர். இது போல அதே பகுதியில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலுக்கும் சீல் வைக்கப்பட்டு இருந்தது. இந்தக் கோயிலையும் அதிகாரிகள் திறந்து வைத்தனர். இங்கும் திரளான பக்தர்கள் சென்று தரிசனம் செய்தனர். இக்கோயிலில் வரும் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடத்தப்படும் என கூறப்படுகிறது.