தமிழகத்தில் மின் உற்பத்தி சீராக இருப்பதால் கோடையில் மின்தடை வராது: அமைச்சர் பி.தங்கமணி
By DIN | Published On : 02nd March 2019 09:05 AM | Last Updated : 02nd March 2019 09:05 AM | அ+அ அ- |

தமிழகத்தில் போதுமான மின்சார உற்பத்தி இருப்பதால் மின்தடை இருக்காது என்று ஓமலூரில் மின்சாரத் துறை அமைச்சர் பி. தங்கமணி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே காமலாபுரம் கிராமத்தில் உள்ள சேலம் விமான நிலையத்துக்கு தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி வெள்ளிக்கிழமை வந்தார். அவர் சேலத்தில் இருந்து சென்னை புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்துள்ள காரணத்தால் வியாழக்கிழமை மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு மின்சார தேவை 15,448 மெகாவாட் அளவுக்கு அதிகரித்துள்ளது. ஏற்கெனவே கூறியுள்ளதைப் போல, கோடை காலத்தில் மின்சாரத்தின் தேவை 16 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கோடையில் மின் தேவை 16 ஆயிரம் மெகா வாட்டாக இருந்தாலும் சரி, 16,500 மெகா வாட்டாக இருந்தாலும் சரி, அதற்குத் தேவையான அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதனால், தமிழகத்தில் மின்வெட்டு வராது என்றார்.
கூட்டணி குறித்த கேள்வியைத் தவிர்த்த அமைச்சர், கட்சி நிர்வாகிகளின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு விமான நிலையத்துக்குள் சென்றார். அப்போது ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல், மின்சார வாரிய அதிகாரிகள், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் அவருக்கு மலர்கொத்துக் கொடுத்து வரவேற்றனர்.