மக்களவைத் தேர்தல் பணியில் 25,835 அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்: ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ்
By DIN | Published On : 08th March 2019 09:26 AM | Last Updated : 08th March 2019 09:26 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தல் பணியில் சுமார் 25,835 அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
சேலம் மாவட்டத்தில் ஜனவரி 31 ஆம் தேதி வெளியான வாக்காளர் பட்டியலின் நிலவரப்படி 14,31,687 ஆண்களும், 14,30,076 பெண்களும், இதரர் 118 பேர் என 28,61,881 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் மக்களவைத் தொகுதியில் 8,00,320 ஆண்களும், 7,92,090 பெண்களும் இதரர் 77 பேர் என மொத்தம் 15,92,487 வாக்காளர்கள் உள்ளனர்.சேலம் மாவட்டத்தில் 3,299 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 1,400-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள 11 வாக்குச்சாவடிகளில் ஆண், பெண் வாக்குச்சாவடிகளாக துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலையொட்டி 33 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 33 நிலை கண்காணிப்புக் குழுக்களும், 33 விடியோ கண்காணிப்புக் குழுக்களும், 11 விடியோ பார்வையிடும் குழுக்கள், 11 கணக்கெடுக்கும் குழுக்கள், 11 உதவித் தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களில் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுக்கள், துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் சுழற்சி முறையில் 24 மணி நேர தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்தல் பணிக்கென வாக்குச்சாவடியில் பணிபுரிய 15,835 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதுதவிர தேர்தல் பணியில் மாவட்டம் முழுவதும் சுமார் 10,000 அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சேலம் மாவட்டத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடி இயந்திரங்களில் 7,824 வாக்குப்பதிவு இயந்திரம், 4,533 கட்டுப்பாட்டு இயந்திரம், 4,251 விவிபேட் கருவிகள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. மேலும், கூடுதலாக 500 விவிபேட் கருவிகள் பெறப்பட்டு முதல்நிலை சரிபார்ப்புப் பணிகள் நடைபெற உள்ளன. வாக்காளர்கள் விடுபடக்கூடாது என்ற நோக்கத்தில் தொடர் திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் வசிப்பிடம் அருகில் உள்ள வாக்குச்சாவடி அமைவிட அலுவலர், வாக்குச்சாவடி நிலை அலுவலரை அணுகலாம். வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களை அணுகி படிவம் 6 மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தம் மேற்கொள்ள படிவம் 8, 8 ஏ மூலமும் விண்ணப்பிக்கலாம். அல்லது www.nsvp.in என்ற இணையதளம் மூலமாகவும், தேர்தல் அறிவிக்கை வரும் வரை விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வகையில் சாய்தளம் ஏற்படுத்துதல், சக்கர நாற்காலி ஏற்பாடு செய்தல், பார்வையற்றவர்கள் வாக்களிக்க பிரெய்லி ஸ்டிக்கர் ஒட்டுதல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி வாக்காளர் தங்களது பெயரை தேர்தல் ஆணையத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள டரஈ அல்ல் என்ற செயலி மூலமாக பெயர் சேர்க்கவும், சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகள் பெற விண்ணப்பிக்கலாம்.
சேலம் மாவட்டத்தில் 212 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. தேர்தல் அறிவிக்கைக்குப் பிறகு அங்குள்ள சூழ்நிலைகளை பொருத்து இந்த எண்ணிக்கை மாறுபடும். புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் ரசீது (பூத் சிலிப்) மட்டுமே கொண்டு வாக்களிக்க அனுமதிக்க இயலாது என தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், மத்திய - மாநில அரசு பணியாளர்களுக்கு வழங்கிய அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்கு புத்தகம், வருமான வரித் துறையின் நிரந்தரக் கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் தொகை அடிப்படையில் வழங்கப்பட்ட அடையாள அட்டை, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அடையாள அட்டை, மத்திய தொழிலாளர் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட காப்பீடு அடையாளஅட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை, உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, ஆதார் அட்டை என 11 அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை கொண்டு வாக்களிக்க முடியும். நாடாளுமன்றத் தேர்தலை நடத்திட மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் தயாராக உள்ளது என்றார். பேட்டியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.திவாகர் உடனிருந்தார்.