Enable Javscript for better performance
சேலம் மாவட்டத்தில் 3.71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு- Dinamani

சுடச்சுட

    

    சேலம் மாவட்டத்தில் 3.71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு

    By DIN  |   Published on : 11th March 2019 03:55 AM  |   அ+அ அ-   |    |  


    சேலம் மாவட்டத்தில் 3 லட்சத்து 71 ஆயிரத்து 89 குழந்தைகளுக்கு ஒரே சுற்றில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது என ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.
    சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்துக்குள்பட்ட குமரசாமிப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்  போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார். மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் முன்னிலை வகித்தார். 
    முகாமில் ஆட்சியர் பேசியது: தமிழகத்தில் 2004 - ஆம் ஆண்டு முதல் போலியோ நோய் அறவே ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்திலும் இந்நோய் வராமல் தடுப்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
    சேலம் மாவட்டத்தில் கடந்த வருடம் முதல் தவணையில் 3 லட்சத்து 73 ஆயிரத்து 186 குழந்தைகளுக்கும், இரண்டாவது தவணையில் 3 லட்சத்து 73 ஆயிரத்து 739 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள்,  ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி மருந்தகங்கள்,  துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள் , பள்ளிகள்,  பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் 189 மையங்கள் உள்பட மாவட்டம் முழுவதும்  3612 மையங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
    மேலும், ஏற்காட்டில் 6 நடமாடும் சொட்டு மருந்து முகாம்களும், அயோத்தியாப்பட்டணம், வீரபாண்டி மற்றும் எடப்பாடி பகுதிகளில் தலா 1 நடமாடும் சொட்டு மருந்து முகாம்களும், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் சுங்கச்சாவடிகள், திரையரங்குகள், சந்தைகள், வணிக வளாகங்கள் மற்றும் விழா நடைபெறும் இடங்களில் 77 போக்குவரத்து முகாம்கள் வாயிலாக போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 
    அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பெரு நகரப் பேருந்து நிலையங்கள், ரயில் நிலைய சந்திப்புகள் மற்றும் சேலம் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சுங்கச்சாவடிகளில் தொடர்ந்து 3 நாள்களுக்கு 24 மணி நேரமும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. 
    குடிசைப் பகுதிகள், சாலையோர வாழ்மக்கள் வசிக்கும் பகுதிகள், நாடோடிகள் வசிக்கும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி சொட்டு மருந்து வழங்குவதற்கு ஏதுவாக சிறப்பு  நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.  
    இப்பணிகளில் மருத்துவ அலுவலர்கள், மருத்துவப் பணியாளர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி கல்வித்துறையைச் சார்ந்தோர், நாட்டு நலத்திட்ட மாணவ, மாணவியர் மற்றும் தன்னார்வுத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் என மொத்தம் 10,057 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் 3 லட்சத்து 71 ஆயிரத்து 89 குழந்தைகளுக்கு ஒரே சுற்றில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது என்றார்.
    முகாமில் உதவி ஆட்சியர் (பயிற்சி) வந்தனா கார்க்,  சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. ஏ.பி.சக்திவேல், சுகாதாரத் துறை துணை இயக்குநர் மருத்துவர் கே.பூங்கொடி,  மாநகர் நல அலுவலர் மருத்துவர் கே.பார்த்திபன் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    சங்ககிரியில்...
    சங்ககிரி ரோட்டரி சங்கம்  மற்றும் கிடையூர் ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய போலியோ சொட்டு மருந்து  முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.   
    முகாமிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.செந்தில்குமார்  தலைமை வகித்தார். மருத்துவர் எஸ்தர் சொட்டு மருந்து புகட்டும் பணியை தொடக்கி வைத்தார். 
    ரோட்டரி  சங்க மாவட்டச் செயலர் வெங்கடாசலம் சொட்டு மருந்து குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கிக் கூறினார்.  ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் ரமேஷ் பாபு,  திட்டத்  தலைவர்  பாஸ்கர், நிர்வாகி இளங்கோ, ரோட்டரி மாவட்டக் கல்வித் தலைவர் வெங்கடேஸ்வர குப்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.   சங்ககிரியில் 24 முகாம்களில் 2,740 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
    ஆத்தூரில்
    ஆத்தூரில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.எம்.சின்னத்தம்பி ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.
    ஆத்தூர் பேருந்து நிலையத்தில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் நகராட்சி ஆணையர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக  ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.எம்.சின்னத்தம்பி கலந்து கொண்டு முகாமை தொடக்கி வைத்தார். நகராட்சிக்குள்பட்ட 33 வார்டுகளிலும்  பொது இடங்கள், திரையரங்குகளில் முகாம் நடைபெறுவதாக தெரிவித்தார். 
    இதில் பிறந்த குழந்தை முதல் 5 வயது வரையிலான அனைத்து குழந்தைகளும் பயன்பெறலாம் என்றார். நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் அ.மோகன், சுகாதார அலுவலர் திருமூர்த்தி, ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp