வாழப்பாடி பகுதியில் வறட்சி: வாழை இலை தட்டுப்பாடு

வாழப்பாடி பகுதியில் நிலவும் கடும்  வறட்சியால், பாசனத்துக்கு வழியின்றி வாழைத் தோட்டங்கள் காய்ந்து வருகின்றன.

வாழப்பாடி பகுதியில் நிலவும் கடும்  வறட்சியால், பாசனத்துக்கு வழியின்றி வாழைத் தோட்டங்கள் காய்ந்து வருகின்றன. இதனால் வாழை இலைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சிற்றுண்டிச் சாலைகள், சிறு உணவகங்களில் தடை செய்யப்பட்ட  நெகிழி, காகித இலைகள் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது.
வாழப்பாடி பகுதியில் கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் வெள்ளாறு, அநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதி ஆற்றுப்படுகை கிராமங்களிலும், பாப்பநாயக்கன்பட்டி கரியகோயில் அணை, புழுதிக்குட்டை ஆணைமடுவு அணை பாசன வசதி பெறும் கிராமங்களிலும், ஏறக்குறைய  ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுக்கு நன்செய் விளைநிலங்களில் நீண்டகால பலன் தரும் வாழை பயிரிடப்பட்டுள்ளது.
வாழப்பாடி பகுதியில் மட்டுமின்றி, நாமக்கல் மாவட்டம், திம்மநாயக்கன்பட்டி, மங்களபுரம்  மற்றும் ஆத்தூரை அடுத்த தம்மம்பட்டி, உலிபுரம், கெங்கவல்லி பகுதிகளில் விளையும் வாழைத்தார் மற்றும் வாழை இலைகளும் வாழப்பாடி பகுதிக்கு விற்பனைக்கு வருகின்றன. வியாபாரிகளும், உணவகங்கள், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களும், வாழைத்தார், வாழை இலை ஆகியவற்றை இப்பகுதி விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து வந்தனர். 
கடந்த ஜனவரி முதல் தேதியில் இருந்து, மறு சுழற்சிக்கு பயன்படாத ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதனால் வாழை இலைகளின் தேவை அதிகரித்ததால் விலை உயர்ந்தது. இந்நிலையில், வாழப்பாடி பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பருவ மழை பொய்த்து,  நிலவும் கடும் வறட்சியால், பாசனத்துக்கு வழியின்றி பெரும்பாலான வாழைத்தோட்டங்கள் காய்ந்து கருகி வருகின்றன. இதனால், வாழை இலைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 
திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து வாழை இலை கொள்முதல் செய்து கொண்டு வரும் இலை வியாபாரிகள், ஒரு சாப்பாட்டு தலைவாழை இலை ரூ.8 க்கும், சிற்றுண்டி இலை ரூ.5 க்கும் வாழப்பாடி பகுதியில் விற்பனை செய்கின்றனர். 
இதனால், வாழை இலையை அதிக விலை கொடுத்து வாங்கி வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற முடியாததால், வாழப்பாடி பகுதியில் பெரும்பாலான உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிகளில் தடை செய்யப்பட்ட  குறைந்த விலைக்கு கிடைக்கும் நெகிழி மற்றும் காகித இலைகளில் உணவு பரிமாறுவது மீண்டும் அதிகரித்துள்ளது. சூடான உணவுப் பொருள்களை நெகிழி காகிதத்தில் வைத்து பரிமாறுவதால், உண்போருக்கு கடுமையான நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
எனவே, உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் நெகிழி காகிதங்களில்  உணவு பரிமாறுவதைத் தடுக்க, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.  
இதுகுறித்து மாரியம்மன்புதூர் விவசாயி இரா. முருகன்.(44) கூறியதாவது: 
வாழப்பாடி பகுதியில் கடந்த 6 மாதங்களாக நீடித்து வரும் கடும் வறட்சியால் வாழைத்தோட்டங்கள் காய்ந்து விட்டன. இதனால், வாழை இலை உள்ளூர் தேவைக்கே பற்றாக்குறை
ஏற்பட்டுள்ளது. 
திருச்சி,நாமக்கல் மாவட்டங்களில் இருந்து விற்பனைக்கு வரும் வாழை இலை விலை அதிகரித்துள்ளதால், உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய தடை செய்யப்பட்ட நெகிழி காகிதங்களில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறப்படுகிறது. 
இதனால், கடுமையான நோய் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே, வாழை இலையில் உணவு பரிமாறவில்லையெனினும், தட்டுகளில் கூட உணவு பரிமாறலாம். இதனை விடுத்து, தடை செய்யப்பட்ட நெகிழி காகிதங்களில் சூடான உணவு பரிமாறுவதைத் தடுக்கவும், பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com