சேலம் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணன்

சேலம் மக்களவைத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளராக கே.ஆர்.எஸ்.சரவணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மக்களவைத் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளராக கே.ஆர்.எஸ்.சரவணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சேலம் சின்னதிருப்பதி பகுதியைச் சேர்ந்தவர் கே.ஆர்.எஸ்.சரவணன்  (45). வழக்குரைஞரான இவர், கடந்த 1996 ஆம் ஆண்டு அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தார். மாணவரணி செயலாளர், பகுதி இளைஞர் அணி செயலாளர், சேலம் மாநகர எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தார்.
சேலம் மாநகராட்சியில் 7 ஆவது கோட்டத்தில் வார்டு உறுப்பினராக இருந்துள்ளார்.  2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வார்டு உறுப்பினர் பதவியை  ராஜிநாமா செய்துவிட்டு சேலம் வடக்குத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார்.  76,710 வாக்குகளை பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். தி.மு.க. வேட்பாளர் வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன் 86,583 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் சேலம் வடக்குத் தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. தோல்வியடைந்தது. மீதமுள்ள 10 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது, அஸ்தம்பட்டி பகுதி செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் கே.ஆர்.எஸ்.சரவணனுக்கு மனைவி கவிதா, மஞ்சரி மற்றும் நக்ஷ்சத்திரா ஆகிய இரு மகள்களும் உள்ளனர். இவரது தந்தை கே.ஆர்.சீனிவாசன், ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் ஆவார். 
சேலம் மாவட்டம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்பதால் இங்கு வெற்றி பெற வேண்டிய சூழலில் அதிமுக உள்ளது. எனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.ஆர்.எஸ்.சரவணன் முக்கியத்துவம் பெறுகிறார். இத்தொகுதியில் அ.தி.மு.க.வுடன், தி.மு.க. நேரடியாக களம் காணுகிறது. திமுக, அமமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களுடன் மும்முனைப் போட்டியை சேலம் மக்களவைத் தொகுதி சந்திக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com