நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது: கே.பாலகிருஷ்ணன்

நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
சேலம் கோட்டை மைதானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்
பேசியது:
மக்களவைத் தேர்தலில் மோடி ஆட்சிக்கு முடிவு கட்ட திமுக தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பாஜகவோ, தேசிய ஜனநாயக கூட்டணி என்று சொல்லி வருகின்றனர். ஆனால் இது அதிமுக கூட்டணி என இன்னொரு பக்கம் சொல்லி வருகின்றனர். கூட்டணிக்குக்கூட பெயர்வைக்க முடியாத கட்சியாக உள்ளனர்.
நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது. வட மாநிலங்களில் நடைபெற்ற 5 மாநிலத் தேர்தல்களில் பாஜக தோல்வியடைந்தது. அந்த அளவுக்கு தற்போது மோடி எதிர்ப்பு அலை வீசி வருகிறது. இப்போது நான் காவலன் என கூறி வருகிறார். அவர் மக்களுக்கு காவலனா?, பெண்களுக்கு காவலனா? என்பதைச் சொல்ல வேண்டும். பிரதமர் மோடி அம்பானிக்கும், அதானிக்கும்தான் காவலனாக உள்ளார். 
ரஃபேல் விமானம் வாங்குவதில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போதே ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் அப்போது ரூ. 526 கோடிக்கு விமானம் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. தற்போது பாஜகவினர் வந்த பிறகு ரூ. 1,600 கோடி கொடுத்து அந்த விமானத்தை வாங்கியுள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளில் பாஜக எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ. 3.68 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்தால் சேலத்தில் வெள்ளி தொழிலும், ஈரோட்டில் விசைத்தறி தொழிலும், திருப்பூரில் பின்னலாடை தொழிலும், கோவையில் பல்வேறு பொறியியல் உற்பத்தி நிறுவனங்கள் முடங்கிவிட்டன.
வேலைவாய்ப்பும் மிகவும் பாதிக்கப்பட்டு, மாநிலத்தின் தொழில் துறை பெரிதும் முடங்கி போய் உள்ளது. பெரிய கட்சி என கூறும் அதிமுக கடந்த 2 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் சிறு குறு தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 
குஜராத்தில் ரூ.3,000 கோடியில் படேல் சிலையை நிறுவியுள்ளனர். ஆனால் தமிழகத்தில் கஜா புயல் தாக்கிய போது ரூ. 17,000 கோடி நிவாரணமாக கேட்டோம். ஆனால் பாஜக அரசு வெறும் ரூ.1,100 கோடி மட்டுமே தந்தது.
சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த பாமகவினர் தற்போது அதிமுகவில் கூட்டணியில் இணைந்துள்ளனர். அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் இத்திட்டம் வேண்டுமா, வேண்டாமா என்பதை விளக்க வேண்டும்.
அதிமுக, பாஜக கூட்டணியில் அக்கட்சியினரிடையே ஏதாவது ஒரு பிரச்னையில்கூட ஒற்றுமை இல்லை. பொள்ளாச்சி ஆபாச விடியோ வழக்கில் விசாரித்தால் உயர் பதவியில் இருப்பவர்கள் சிக்குவார்கள் என்றார்.
கூட்டத்தில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன், சேலம் வடக்குத் தொகுதி எம்எல்ஏ வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன், கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மோகன், மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் பி.ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியில் மாநகர மாவட்டத் தலைவர் ஜெயபிரகாஷ், மதிமுக ஆனந்தராஜ், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லீம் லீக் உள்ளிட்ட  பல்வேறு கட்சிகளின் நிர்வாககிள்
பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com