Enable Javscript for better performance
இலக்கண நூல்களை வாழ்க்கைக்காக படிக்க வேண்டும்: கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்- Dinamani

சுடச்சுட

    

    இலக்கண நூல்களை வாழ்க்கைக்காக படிக்க வேண்டும்: கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்

    By DIN  |   Published on : 27th March 2019 09:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களை மதிப்பெண்களுக்காக படிக்காமல், வாழ்க்கைக்காக படிக்க வேண்டும் என கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கேட்டுக்கொண்டார்.
     பெரியார் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை சார்பில் நடத்தப்படும் "பன்முகநோக்கில் இலக்கியங்கள்' என்னும் தலைப்பிலான இரண்டு நாள் பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
     விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் தி.பெரியசாமி வரவேற்றார். பயிலரங்கினைத் தொடங்கி வைத்து துணை வேந்தர் பொ. குழந்தைவேல் பேசியது: இருமுறை சாகித்ய அகாதெமி விருது பெற்ற கவிஞர் சிற்பி போன்ற அறிஞர் பெருமக்களைஅழைத்து விழா நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. பதிப்புத் துறையின் மூலமாக தமிழ்த்துறை பல பரிசு பெறும் சிறந்த நூல்களை உருவாக்க வேண்டும். நுண்கலை மன்றம் போன்ற பல அமைப்புகள் பல்கலைக்கழகத்தால் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வமைப்புகளை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பல்வேறு தமிழறிஞர்களை ஒன்றிணைத்தும், பல ஆய்வாளர்களை அழைத்தும் இது போன்ற நிகழ்வுகளை நடத்த வேண்டும் என்றார்அவர்.
     இதனைத் தொடர்ந்து சாகித்ய அகாதெமியின் தமிழ்மொழி ஒருங்கிணைப்பாளரும், கவிஞருமான பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியம் நவீன தமிழ்க் கவிதை என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியது: தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களை மதிப்பெண்களுக்காக படிக்காமல் வாழ்க்கைக்காகவும், எழுதும் எழுத்துகளுக்காகவும் படிக்கவேண்டும். தற்போது பல்வேறு விதமான படைப்பிலக்கியங்கள் தமிழ் மொழியை அழகு செய்து கொண்டிருக்கின்றன. ஈராயிரமாண்டு கால வரலாற்றைக் கொண்ட தமிழ்க் கவிதை மரபு பாரதியிலிருந்து புதுமைப் பெறுகிறது. பல மொழிகளைக் கற்று உலக இலக்கியப் போக்கை புரிந்து கொண்ட பாரதி தமிழ்க் கவிதைகளில் புதுமைகளைப் புகுத்தினார். பாரதியின் காலத்தில்தான் தேசியம் பாடுபொருளாகிறது.
     கவிதை என்பது மனிதனின் நுண்ணுணர்வின் விளையாட்டரங்கம் அது இயந்திரத்தனமானதுஅல்ல. கவிதைக்கு எந்த வரையறைகளும் தேவையில்லை. மாணவர்கள் பல நல்ல நூல்களைத் தேடி வாசித்துப் படிக்க வேண்டும் என்றார் அவர்.
     இதனைத் தொடர்ந்து பிற்பகல் அமர்வில் கவிஞர் மகுடேசுவரன், தற்கால தமிழ் இலக்கணம் என்னும் தலைப்பில் உரையாற்றுகையில் காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, முற்றுப்புள்ளி ஆகிய குறியீடுகளை அமைக்கும் இடங்கள், பல்வேறு தொகை வகைகள், வல்லெழுத்து மிகும், மிகா இடங்கள் முதலிய அடிப்படை இலக்கணங்களை எளிமையாக எடுத்துக் கூறியதுடன் மாணவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளித்தார். தமிழ்த் துறை பேராசிரியர் மோ.தமிழ்மாறன் நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai