Enable Javscript for better performance
குகை பகுதியில் 9 கிலோ வெள்ளிக் கட்டிகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    சேலம் குகை லைன்மேடு பகுதியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.3.81 லட்சம் மதிப்புள்ள 9 கிலோ வெள்ளிக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
       மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள நிலையில்,  பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் கொண்டு செல்லும் போது உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    மேலும்,  தேர்தல் நடத்தை விதிமுறைகள் அடிப்படையில் சேலம் தெற்கு தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பறக்கும் படையினர்,  நிலை கண்காணிப்புக் குழுவினர் தணிக்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  அதன் அடிப்படையில் 24 மணி நேரமும் வாகனத் தணிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
    இந்த நிலையில்,  சேலம் தெற்கு தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும்,  ஆணையருமான ரெ.சதீஷ் உத்தரவின் பேரில்,  குகை லைன்மேடு பகுதியில் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. 
    இதில்,  சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பரமசிவம் உரிய ஆவணங்களின்றி ரூ.3.81 லட்சம் மதிப்புள்ள 9 கிலோ வெள்ளிக் கட்டிகளைக் கொண்டு சென்றது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.  பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளிக் கட்டிகளை மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் ஆய்வு செய்த பின்னர்,  மாவட்டக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன. சம்பந்தப்பட்ட நபரிடம்  உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது.
    ஆய்வின் போது,  கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ம.சுந்தரராஜன், உதவிப் பொறியாளர் எஸ்.ஆனந்த யுவனேஷ் தலைமையிலான பறக்கும் படையினர், காவல் துறையினர்,  நிலை கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.
    அதேபோல், கொண்டலாம்பட்டி புறவழிச் சாலையில் மேற்கொள்ளப்பட்ட வாகனச் சோதனையில்,  கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த பாபு என்பவரிடம் இருந்து ரூ.7.30 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து மாவட்டக் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai