Enable Javscript for better performance
சேலத்தில் இதுவரை ரூ.4.50 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    சேலத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.4.50 கோடி பணம், வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
     மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட பின்னர், சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி, ஒமலூர், எடப்பாடி, கெங்கவல்லி, ஏற்காடு, ஆத்தூர், சங்ககிரி மற்றும் மேட்டூர் ஆகிய 11 தொகுதிகளிலும் மொத்தம் 99 பறக்கும் படைகள், 33 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 11 விடியோ கண்காணிப்புக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
     சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதில் இருந்து மார்ச் 11-ஆம் தேதி முதல் மார்ச் 23-ஆம் தேதி வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.4,46,37,215 ரொக்கமும், 276 எவர்சில்வர் தட்டுகளும், 64 எவர்சில்வர் டிபன்பாக்ஸ்களும், 46.33 கிலோ கிராம் வெள்ளி ஆபரணப் பொருள்களும், ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்களும், 222.42 கிலோ கிராம் எடையுள்ள 11 துத்தநாக கட்டிகளும், ரூ.17,38,118 மதிப்புள்ள புடவைகள் மற்றும் சுடிதார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட 276 எவர்சில்வர் தட்டுக்களும், 64 எவர் சில்வர் டிபன்பாக்ஸ்களும், ரூ.34,40,300 ரொக்கமும் (மார்ச் 25 வரை) உரிய ஆவணங்கள் அளித்ததன் அடிப்படையில் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
     வாக்காளர்கள் தேர்தல் குறித்த தகவல் மற்றும் புகார்களை தெரிவிக்க இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 என்ற எண்ணுக்கு இதுவரை 4,841 அழைப்புகளும், 1800-425-7020, 1800-425-1984 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களுக்கு இதுவரை 18 அழைப்புகளும் வரப்பெற்று உரிய விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் 1950, 1800-425-7020, 1800-425-1984 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் விவரங்களை கேட்டு அறிந்துகொள்வதோடு, தங்கள் புகார்களையும் பதிவு செய்யலாம்.
     சேலம் மாவட்டத்தில் துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டுள்ள 1,972 நபர்களில் 1,903 நபர்களிடமிருந்து துப்பாக்கிகள் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் நாளதுவரை 277 நபர்கள் சமூக விரோதிகளாக கண்டறியப்பட்டு அவர்கள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன்.
     சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சி-விஜில் மையத்தில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து 70 புகார்கள் பதிவு செய்யப்பட்டன.
     அதுகுறித்து உடனடியாக பறக்கும்படை குழுக்கள் மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்களுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஒற்றை சாளர முறையில் தேர்தல் பிரசார அனுமதி வழங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுவிதா கட்டுப்பாட்டு அறையில் சுவிதா மூலம் மொத்தம் 47 விண்ணப்பங்கள் வரப்பெற்று அவற்றில் 38 விண்ணப்பங்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உரிய அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.
     மீதமுள்ள 9 விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் பொதுக்கூட்டம் நடத்திட அனுமதி வேண்டி 4 விண்ணப்பங்களும், உள் அரங்க கூட்டங்கள் நடத்திட அனுமதி வேண்டி 15 விண்ணப்பங்களும், தெருமுனைக் கூட்டங்கள் நடத்திட அனுமதி வேண்டி 17 விண்ணப்பங்களும், தேர்தல் பிரசார வாகனத்துக்கு அனுமதி வேண்டி 1 விண்ணப்பமும், வாகன கொடிக்கான அனுமதி வேண்டி 3 விண்ணப்பங்களும், தற்காலிக தேர்தல் அலுவலகம் அமைத்திட 4 விண்ணப்பங்களும், வேட்பாளர் தேர்தல் பிரசார அனுமதி வேண்டி 3 விண்ணப்பங்களும் என மொத்தம் 47 விண்ணப்பங்கள் வரப்பெற்றன என ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai