"இன்றைய சமூக சிக்கல்களை காந்தியக் கொள்கைகளால் மட்டுமே தீர்க்க முடியும்'
By DIN | Published On : 28th March 2019 09:17 AM | Last Updated : 28th March 2019 09:17 AM | அ+அ அ- |

இன்றையச் சமூகச் சிக்கல்களை காந்தியக் கொள்கைகளால் மட்டுமே தீர்க்க முடியும் என காந்தியச் சிந்தனையாளரும், பாரதிய வித்யா பவன் தலைவருமான பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் தெரிவித்தார்.
மகாத்மா காந்தி அடிகளின் 150-ஆவது பிறந்த நாள் விழா பெரியார் பல்கலைக்கழக ஆங்கிலத் துறை சார்பில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, கடந்த ஆறு மாத காலமாக காந்தியடிகள் குறித்த பல்வேறு போட்டிகளை நடத்தி, அப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு நிகழ்வும், 150-ஆவது பிறந்த நாள் விழாவும் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
விழாவில் தலைமையுரையாற்றிய பல்கலைக்கழகத் துணை வேந்தர் பொ.குழந்தைவேல், "சொல், செயல், சிந்தனை மூன்றையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்தி செயல்பட்டவர் மகாத்மா காந்தி. மக்களின் வாழ்க்கைக்கு ஏற்ற கல்வி தேவை என்பதனை காந்தி வலியுறுத்தினார். இது இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் பொருத்தமான பார்வை கொண்டதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை என்றார்.
விழாப் பேருரையாற்றிய காந்தியச் சிந்தனையாளரும், பாரதிய வித்யா பவன் தலைவருமான பி.கே. கிருஷ்ணராஜ் வானவராயர், காந்தியச் சிந்தனையின் இன்றையத் தேவைகள் குறித்து எடுத்துரைத்தார்.
அப்போது அவர் கூறியது: மனித குலம் இன்றைக்கு சந்திக்கும் பல்வேறு சிக்கல்களுக்கு காந்தியை மறந்ததே காரணமாகும். தனியார் மயம், தாராள மயம், உலகமயமாதல் என்ற சூழலில், விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வளர்ந்த சூழலில் ஆடம்பரங்கள் எல்லாம் அத்தியாவசியமாகி விட்டன. வேலைவாய்ப்பை மையப்படுத்திய கல்வியை விட, வாழ்க்கையை மையப்படுத்திய கல்வியைக் கற்பிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.
வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமெனில் காந்தியின் கொள்கைகள் மட்டும் தான் துணையாக இருக்கும். காந்தியின் கொள்கைகள் மட்டுமே இன்றைய சமூக சிக்கல்களைத் தீர்க்க இயலும்.
இன்றைக்கு சமூகத்தில் நிலவுகின்ற இனவெறி, சகிப்புத் தன்மையற்ற நிலை, சமூக சிக்கல்கள் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டியது அவசியமாக உள்ளது. தேசம் பற்றிய சிந்தனையும், சமூக உணர்வும் இன்றைக்கு அவசியமாக உள்ளது. அறியாமை, அலட்சியம் இரண்டும் மனித சமூகத்தில் நிலவும் மிகப் பெரிய சிக்கலாக உள்ளது. எனவே காந்தியக்கொள்கைகளை இன்றைய இளைஞர்கள் உள்வாங்கிக் கொண்டு செயலாற்ற வேண்டும் என்றார்.
காந்தி குறித்த பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, ஆங்கில துறைத் தலைவர் பேராசிரியர் வி.சங்கீதா வரவேற்றார். உதவிப் பேராசிரியர் எஸ்.சிநேகா நன்றி கூறினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...