"சங்க இலக்கியங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தும்'
By DIN | Published On : 02nd May 2019 09:19 AM | Last Updated : 02nd May 2019 09:19 AM | அ+அ அ- |

சங்க இலக்கியங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தும் பொதுவான நெறிமுறைகளையே கொண்டதாகும் என சொற்பொழிவாளர் சாரதி பஞ்சாசரம் பேசினார்.
சேலம் தமிழ்ச் சங்கம் சார்பில் இலக்கிய விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு சங்கத் தலைவர் சீனி.துரைசாமி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சொற்பொழிவாளர் சாரதி பஞ்சாசரம் பங்கேற்று, காலத்தை வென்ற இலக்கியம் என்ற தலைப்பில் பேசியது:
ஒவ்வொரு சமயத்தினருக்கும் பொதுவான வேதாந்தங்களுக்கும் முந்தைய தொன்மையானது தொல்காப்பிய தமிழ் ஆகும். பின்னர் வள்ளுவ தமிழ், பாரதி தமிழ், பாரதிதாசன் தமிழ், கண்ணதாசன் தமிழ் என தமிழ் மொழி பல பரிமாணங்களில் பயணித்துள்ளது. இருப்பினும், நம் முதாதையர்கள் வாழ்ந்த சங்க இலக்கிய வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தே நாம் இன்றும் வாழ்ந்து வருகிறோம்.
ஒருவருக்கு ஒருத்தி என்ற நம் நாட்டு அகவாழ்க்கை இலக்கணத்தை மேலை நாட்டினரும் பாராட்டுவதோடு, ஒழுக்க வாழ்க்கையினை பெருமைப்படும் வழியில் நாம் வாழ்ந்து வருகிறோம். பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல கால மரபினாலே என்று தொல்காப்பியம் குறிப்பிட்டிருந்தாலும், தற்கால இலக்கியங்கள் சங்க கால வாழ்க்கை முறையை ஒட்டியே இயம்பப்பட்டு வருகிறது. அத்தகைய பெருமை வாய்ந்த சங்க இலக்கியங்கள் நம்மை வழிநடத்திச் செல்லும். மேலும், சங்க இலக்கியங்கள் வாழ்வின் வழிகாட்டியாக எல்லா காலத்துக்கும் பொருந்தும் பொதுவான நெறிமுறைகளையே கொண்டதாகும் என்றார். விழாவில், செயலர் வரத.ஜெயக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் சி.பன்னீர்செல்வம், ஏ.கே.அஷ்ரப் அலி மற்றும் ஏராளமான இலக்கிய ஆர்வலர்கள்
கலந்துகொண்டனர்.