விதை விற்பனை நிலையங்களில் வேளாண் அலுவலர்கள் ஆய்வு

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கோடை விவசாயிகளை ஏமாற்றும் வகையில் வெளிமாநில விதைகள் விற்பனை செய்யப்படு


சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கோடை விவசாயிகளை ஏமாற்றும் வகையில் வெளிமாநில விதைகள் விற்பனை செய்யப்படு
கிறதா? என விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வாளர்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் எடப்பாடி, சங்ககிரி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி ஆகிய வட்டங்களில் ஆங்காங்கே கோடை மழை பெய்தது.
இதைக் கொண்டு அப்பகுதி விவசாயிகள் எள், உளுந்து, பச்சைப் பயறு, நிலக்கடலை, தட்டைப்பயறு மற்றும் வெண்டை, தக்காளி போன்ற பயிர்களை விதைக்க துவங்கி உள்ளனர்.
இந்த நிலையில் பல்வேறு விதை விற்பனை நிலையங்களில் தரமற்ற விதைகளையும், ஒரு சில இடங்களில் வெளிமாநில விதைகளையும் விற்பனை செய்வதாக விவசாயிகள் புகார் கூறி வந்தனர்.
இதைத் தொடர்ந்து  தரமற்ற போலியான, முளைப்புத் திறன் குறைந்த விதைகளின் விற்பனையைத் தடை செய்யும் பொருட்டு ஆய்வுகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செய்யப்பட்டன.
கொங்கணாபுரம், எடப்பாடி, ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் சேலம் விதை ஆய்வு துணை இயக்குநர் நாசர் தலைமையில், விதை ஆய்வாளர்கள் சம்பத்குமார், சரவணன் மற்றும் கிரிஜா ஆகியோர் அடங்கிய  தனிப் படையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் விதைகளின் புத்தக இருப்பு மற்றும் உண்மை இருப்பு, கொள்முதல் பட்டியல், விதைகளின் முளைப்புத் திறன் அறிக்கை, பதிவு பெற்ற விதைகளின் சான்றிதழ் அறிக்கை, விதைச் சட்டம் 1966-ன்படி தரம் உறுதி செய்யப்பட்ட சான்றிதழ்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
ஆய்வின் முடிவில் முளைப்புத் திறன் அறிக்கை இல்லாத,  தரம் உறுதிப்படுத்தப்படாத, விதைச் சட்டத்துக்குப் புறம்பான விதைகள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அந்த விதைகளை விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், சுமார் 500 கிலோ அளவிலான ரூ. 2.7 லட்சம் மதிப்பிலான பயறு, எள், காய்கறி விதைகளின் குவியல்களுக்கு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து விவசாயிகள் உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில், தரமான விதைகளை ரசீதுடன் வாங்கிப் பயனடையுமாறு சேலம் விதை ஆய்வு துணை இயக்குநர் நாசர் கேட்டுக் கொண்டார்.
மேலும், விதை தரம் தொடர்பான குறைகள் கண்டறியப்பட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள விதை ஆய்வு துணை இயக்குநர் அலுவலகத்தில் தெரிவிக்குமாறும் விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com