"நீட்' தேர்வு எழுத வந்த  மாணவிகளின் பைகளைத் திருடிய  எம்.பி.ஏ. பட்டதாரி கைது

"நீட்' தேர்வு எழுதுவதற்காக தருமபுரியிலிருந்து சேலம் வந்த மாணவிகளின் பைகளைத் திருடியதாக எம்.பி.ஏ. பட்டதாரி கைது செய்யப்பட்டார்.

"நீட்' தேர்வு எழுதுவதற்காக தருமபுரியிலிருந்து சேலம் வந்த மாணவிகளின் பைகளைத் திருடியதாக எம்.பி.ஏ. பட்டதாரி கைது செய்யப்பட்டார்.
எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பில் சேருவதற்கான "நீட்' தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பச்சனாம்பட்டியைச் சேர்ந்த மாணவிகள் இருவர் தங்களது பெற்றோருடன் ஞாயிற்றுக்கிழமை காலை சேலம் புதிய பேருந்து நிலையம் வந்தனர்.
அப்போது புதிய பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்தபோது, மாணவிகளின் பைகளை யாரோ மர்ம நபர்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது. 
அந்தப் பைகளில் மாணவிகள் "நீட்' தேர்வு எழுதுவதற்கான அனுமதி சீட்டு மற்றும் ஆதார் அடையாள அட்டை இருந்தது.
இதையடுத்து மாணவி ஒருவரின் பெற்றோர் ஏ.வெங்கடேசன் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனே பள்ளப்பட்டி போலீஸார் துரிதமாக செயல்பட்டு சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர்.
மேலும் பைகளை எடுத்த நபரின் புகைப்படத்தை வைத்துத் தேடினர். அச்சமயத்தில் திருப்பூர் செல்லும் பேருந்து நிற்கும் இடத்தில் திருடு போன பைகளுடன் நின்ற சேலம் செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த எம்.பி.ஏ.  பட்டதாரி தினேஷ்குமாரை (26) கையும் களவுமாக போலீஸார் பிடித்தனர்.
பின்னர், அவரிடமிருந்து பைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். 
பைகளில் இருந்த அனுமதி சீட்டு மற்றும் ஆதார் அட்டைகளை எடுத்து மாணவிகளுக்குக் கொடுத்தனர். இதையடுத்து மாணவிகள் இருவரையும் சரியான நேரத்தில் "நீட்' தேர்வு எழுத தேர்வு மையத்துக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
பைகளைத் திருடியதாக தினேஷ்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  புகார் பெறப்பட்ட 10 நிமிடங்களில் துரிதமாகச் செயல்பட்ட  உதவி ஆய்வாளர் அயுப்கானை மாநகரக் காவல் ஆணையர் கே. சங்கர் வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com