முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
வறட்சியால் காய்ந்து போன வெற்றிலைத் தோட்டங்கள்: விலை வீழ்ச்சி
By DIN | Published On : 15th May 2019 08:49 AM | Last Updated : 15th May 2019 08:49 AM | அ+அ அ- |

வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், பேளூர், ஏத்தாப்பூர், நரசிங்கபுரம் உள்ளிட்ட பகுதியில் தொடரும் வறட்சியால், நீர்பாசனத்துக்கு வழியின்றி 3,000 ஏக்கர் பரப்பளவு வெற்றிலைத் தோட்டங்கள் காய்ந்து விட்டன.
நீர் பாசனம் இல்லாததால் வெற்றிலைகள் அளவில் சிறுத்து தரம் குறைந்ததால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை ஆணைமடுவு அணை, பாப்பநாயக்கன்பட்டி கரியகோவில் அணை பாசன வசதி பெறும் கிராமங்கள் மற்றும் பேளூர், ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன் பாளையம், நரசிங்கபுரம் ஆத்தூர், தலைவாசல், தம்மம்பட்டி, கெங்கவல்லி ஆகிய பகுதியில் வசிஷ்ட நதி, வெள்ளாறு, ஸ்வேதா நதி கரையோரக் கிராமங்களில் நீண்டகால பலன் தரும் வெற்றிலையை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும், வேலைவாய்ப்பும் கூடுதல் வருவாயும் கிடைத்ததால், அகத்தி, கல்யாண முருங்கை, சவுன்டு மர நிழலில் கொடிக்கால் அமைத்தும், இளம் பாக்குமர தோப்புகளில் ஊடுபயிராகவும் ஏறக்குறைய 5,000 ஏக்கர் பரப்பளவில் வெள்ளை மற்றும் கருப்பு ரக வெற்றிலையை பயிரிட்டனர்.
சேலம் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் வெற்றிலையை, வாழப்பாடி அடுத்த பேளூர், பெரியகிருஷ்ணாபுரம் மற்றும் ஆத்தூரில் இயங்கும், தினசரி வெற்றிலை மண்டிக்குக் கொண்டு சென்று, விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
கொள்முதல் செய்யும் வியாபாரிகள், தமிழகம் மட்டுமின்றி, கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூரு பகுதிக்கும் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.
வாழப்பாடி, ஆத்தூர், பெத்தநாயக்கன் பாளையம், ஏத்தாப்பூர், பேளூர் தம்மம்பட்டி மற்றும் கெங்கவல்லி பகுதியில் கடந்த ஓராண்டாக மழை பொய்த்துப் போனதால், கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால், நீர் பாசனத்துக்கு வழியின்றி ஏறக்குறைய 3,000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வெற்றிலை கொடிக்கால் தோட்டங்கள் அழிந்து விட்டன.
எஞ்சியுள்ள 2,000 ஏக்கர் வெற்றிலைத் தோட்டங்களிலும் போதிய நீர்பாசனம் இல்லாததால் அறுவடையாகும் வெற்றிலைகள் அளவில் சிறுத்து சுருங்கியும், கரும்புள்ளிகளுடன் தரம் குறைந்து காணப்படுகின்றன.
பேளூர் வெற்றிலை வியாபாரிகள் சிலர் கூறியதாவது:
வறட்சியால் வெற்றிலை வரத்து பெருமளவில் குறைந்து விட்டது. 110 முதல் 120 வெற்றிலை கொண்ட ஒரு கட்டு "கவுளி' எனவும், 60 கவுளிகள் (ஏறக்குறைய 7,000 வெற்றிலைகள்) கொண்ட ஒரு பெரிய கட்டு "ஒரு ஒத்து' எனவும் குறிப்பிடுவது வழக்கம். நாளொன்றுக்கு 1,000 ஒத்து வெற்றிலைக் கட்டுகள் விற்பனைக்கு வந்த நிலை மாறி, வறட்சியால் படிப்படியாக விளைச்சல் குறைந்து போனதால், தற்போது 100 ஒத்து வெற்றிலை கட்டுகள் கூட விற்பனைக்கு வருவதில்லை.
விற்பனைக்கு வரும் வெற்றிலைகளும், அளவில் சிறுத்து சுருக்கம் மற்றும் கரும்புள்ளிகளுடன் தரம் குறைந்து காணப்படுகின்றன. எனவே, சேலம் மாவட்ட வெற்றிலை வியாபாரிகள், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மற்றும் கரூர் உள்ளிட்ட அண்டை மாவட்டத்தில் இருந்து வெற்றிலையைக் கொள்முதல் செய்து வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால், உள்ளூர் வெற்றிலைகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. என்றார்.
புழுதிக்குட்டை வெற்றிலை விவசாயி சின்னுசாமி கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் ஓராண்டாக மழையின்றி வறட்சி நிலவுவதால், பெரும்பாலான வெற்றிலைத்தோட்டங்கள் காய்ந்து விட்டன. வெற்றிலைகளும் அளவில் சிறுத்து தரம் குறைந்து விட்டது. இதனால், ஒரு ஒத்து வெற்றிலைக்கு ரூ. 2000 வரைக் கூட விலை கிடைக்கவில்லை. வெற்றிலை தோட்டத்தை பராமரிப்பதற்கும், தொழிலாளர்களை கொண்டு வெற்றிலையை பறித்து விற்பனைக்கு கொண்டு செல்வதற்கும் கூட போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் வெற்றிலை சாகுபடியை கைவிட வேண்டிய அளவுக்கு நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என்றார்.