2 மாணவர்கள் இறந்த சம்பவம்: வலசக்கல்பட்டி ஏரியில் குளிக்கத் தடை
By DIN | Published On : 15th May 2019 08:54 AM | Last Updated : 15th May 2019 08:54 AM | அ+அ அ- |

கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரியில் இரு மாணவர்கள் உயிரிழந்த நிகழ்வையொட்டி, அங்கு குளிக்க போலீஸார் தடை விதித்துள்ளனர்.
வலசக்கல்பட்டி ஏரியில் இருந்து கெங்கவல்லி உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த ஏரியில் கடந்த மார்ச் 10-ஆம் தேதி கடலூர் மாவட்டத்துக்குள்பட்ட சிறுபாக்கத்தைச் சேர்ந்த முருகன்(27) என்பவர் குளிக்கச் சென்றபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இதையடுத்து, ஏப்ரல் 12-இல் கல்லூரி மாணவர்கள் 6பேர் குளிக்கச் சென்றபோது, ஆத்தூரைச் சேர்ந்த சிவசங்கரன் (21), ராசிபுரத்தைச் சேர்ந்த சேந்தமங்களம் கோகுல்(21) ஆகிய 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்த நிலையில், 74 கிருஷ்ணாபுரம் ஊராட்சி நிர்வாகம் சார்பிலோ, கெங்கவல்லி போலீஸார் சார்பிலோ எந்தவித எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகளும் வைக்கப்படவில்லை என்று பொதுமக்களிடையே அதிருப்தி எழுந்தது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கனிக்கருக்கும் தகவல் சென்றது.
இதையடுத்து, கெங்கவல்லி போலீஸார் சார்பில் வலசக்கல்பட்டி ஏரிக்குச் செல்லும் பகுதிகளிலும், பேருந்து நிறுத்தத்திலும், ஏரிக் கரைகளிலும் குளிக்கத் தடை செய்யப்பட்டுள்ளதாக எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பலகைகளில், "ஏரியில் ஆபத்து நிறைந்த ஆழமான பகுதிகள் உள்ளன.எனவே இந்த ஏரியில் பொதுமக்கள் குளிக்கத்தடை செய்யப்பட்டுள்ளது.தடையை மீறி குளிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புக்கு கெங்கவல்லி காவல் உதவி ஆய்வாளர் செல்போன் எண்:9498100989' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.