ஓமலூரில் பிரம்பு ஊஞ்சல்கள், நாற்காலிகள் விற்பனை
By DIN | Published On : 15th May 2019 08:54 AM | Last Updated : 15th May 2019 08:54 AM | அ+அ அ- |

ஓமலூரில் இயற்கையான பொருள்களில் தயாரான பிரம்பு நாற்காலிகள், ஊஞ்சல்கள் விற்பனை நடைபெறுகிறது.
பிரம்பு குச்சியால் தயார் செய்த பொருள்கள் நீண்ட நாட்களுக்கு உழைப்பதுடன், அழகு நிறைந்த பொருளாகவும் வீடுகளில் வைக்கப்படுகிறது. சாதாரண ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரையும், வீடுகள் முதல் நட்சத்திர ஹோட்டல்கள் வரையும் இவை பயன்பாட்டில் உள்ளதால், பிரம்புப் பொருள்களுக்கு மவுசு சற்று அதிகமாகவே உள்ளது.
இந்தநிலையில் ஆந்திர மாநிலத்தில் பிரம்பினால் தயாரிக்கப்பட்ட ஊஞ்சல்கள், நாற்காலிகள் ஓமலூருக்கு கொண்டு வந்து சாலையோரத்தில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதன் விலை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரம் வரையில் விற்பனை செய்யபடுகிறது.
இதுகுறித்து தஞ்சையைச் சேர்ந்த பிரம்பு விற்பனையாளர் பிரபு கூறியது:-
கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக பிரம்பு குச்சியால் தயார் செய்த கட்டில், ஊஞ்சல், பிறந்த குழந்தைகளுக்கான தொட்டில், நாற்காலிகள், கூடைகள் என பலவற்றை விற்பனை செய்து வருகிறேன்.
பாரம்பரியப் பொருள்களைப் பாதுகாப்பதுடன் பயன்படுத்தவும் வேண்டும். உடல் சோர்வு, தூக்கமின்மை போன்றவை நீங்க இந்த பிரம்பு குச்சியால் தயார் செய்த கட்டில் அல்லது நாற்காலிகளைப் பயன்படுத்தலாம். இவை அக்குபஞ்சர் முறையில் உடலுக்கு அழுத்தம் கிடைக்கிறது. இப்போது நாகரிகப் பொருள்களை மறந்து இயற்கை பொருள்களை உபயோகப்படுத்துகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரம்புப் பொருள்களை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்கிறோம். கைவினை பொருள்களுக்கு அரசு மானியம் கொடுப்பதுபோல் எங்களை ஊக்குவிக்கும் வகையில் மானியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரம்புக் குச்சியால் தயார் செய்த பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்கு தேவையான இடவசதிகளை செய்துதர வேண்டும் என்றார்.