சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானம் பாதுகாக்கப்படுமா?

சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானம் பாதுகாக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானம் பாதுகாக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
சங்ககிரி மலையடிவாரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கடந்த 1953 ஜூலை 4-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை 800 மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியின் பாதுகாப்பு கருதி பள்ளியின் உள்புறத்திலிருந்து விளையாட்டு மைதானத்துக்கு செல்லும்  வழியில் கடந்த பல மாதங்களுக்கு முன் உயரமான இரும்பு நுழைவு வாயில் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நுழைவு வாயிலின் பாதுகாப்பையொட்டி, வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் இப்பள்ளியில் அடிக்கடி துறைகள் சார்ந்த பல்வேறு கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மலையடிவாரத்தில் இருந்து பவானி பிரதான சாலைக்கு செல்லும் வழியில் உள்ள வழித்தடத்திலிருந்து பள்ளி விளையாட்டு மைதானத்துக்கு மற்றும் ஒரு வழி பள்ளியின் சார்பில் ஏற்படுத்தப்பட்டு இரும்பு நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த நுழைவு வாயில் வழியாக மாணவர்கள் அல்லாதவர்கள் பள்ளி வேலை நாள்கள் உள்பட தினசரி பல்வேறு விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர். சிலர் அதிகாலையில்  நடைப்பயிற்சிக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் இப்பகுதியில் உள்ள நுழைவு வாயிலின் ஒரு பகுதி சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டு, இரவு நேரங்களில் கார், இருசக்கர வாகனங்களில்  உள்ளூர், வெளியூர் நபர்கள் என அதிகளவில் வந்து மது அருந்தும் இடமாக பயன்படுத்தியும், சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், விளையாட்டு மைதானம் உள்ள தெற்குப் பகுதியில் உள்ள இரு சுகாதார வளாகங்கள் சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டு  பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளன.
பள்ளியின் பிரதான நுழைவு வாயிலையொட்டி மலைக்கு செல்லும் சாலையில் இருந்து பவானி பிரதான சாலைக்கு செல்லும் வழியில் உள்ள மின்கம்பத்தில் உள்ள மின்விளக்குகளை சமூக விரோதிகள் உடைத்தும், பேரூராட்சி சார்பில் பராமரித்து வரும் உயர் கோபுர மின்விளக்கு ஒளிராததை பயன்படுத்தியும், இந்த சாலைகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் நிழற்கூடங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை இரவு நேரத்தில் மது அருந்தும் கூடமாகவும், சமூக விரோதச் செயலுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, பள்ளி திறப்பதற்கு முன் கல்வித் துறையினர் விளையாட்டு மைதானத்தில் உள்ள சேதமடைந்த சுகாதார வளாகங்களை அகற்றி, மாணவர்களுக்கு புதிதாக சுகாதார வளாகங்களை அமைத்தும், சமூக விரோதிகளால் உடைக்கப்பட்ட மதில்சுவரை செப்பனிட்டும், சேதமடைந்த இரும்பு நுழைவு வாயிலை செப்பனிட்டும், பள்ளி பிரதான நுழைவு வாயிலிருந்து மலைக்கு செல்லும் சாலை, மலையடிவாரம், பவானி பிரதான செல்லும் சாலைகளில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களை மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல் துறையும்  கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இப்பகுதியில் தினசரி போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com