நிதி நிறுவன அதிபர் தற்கொலை: எஸ்.பி. விசாரணை
By DIN | Published On : 16th May 2019 09:20 AM | Last Updated : 16th May 2019 09:20 AM | அ+அ அ- |

ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் விநாயகபுரம் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த கோபால் நாயக்கர் மகன் பிரேம்குமார் (49), நிதிநிறுவனம் நடத்தி வந்தார். இவர் நரசிங்கபுரம் தில்லை நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான குட்டி (எ) ராஜ்குமாரின் (30), ஆட்டோ ஆர்.சி. புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு ரூ.1.25 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட ராஜ்குமார், ரூ.12 ஆயிரத்தை மட்டும் செலுத்தி விட்டு, மீதித் தொகையைக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், தாழ்த்தப்பட்ட ஜாதியைக் கூறி திட்டியதாக தன் மீதும், தனது தம்பி வி.ஜி.செந்தில்குமார் மீதும் ஆத்தூர் காவல் நிலையத்தில் ராஜ்குமார் புகார் கொடுத்துள்ளதாகவும், ராஜ்குமாரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு காவல் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் தங்கள் மீது வழக்குப் பதிந்துள்ளதாகவும் பிரேம்குமார் கட்செவி அஞ்சலில் விடியோ பதிவு செய்து நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, மனமுடைந்த பிரேம்குமார் செவ்வாய்க்கிழமை காலை தனது வீட்டில் விஷமருந்தி மயங்கி விழுந்துள்ளார். அவருடைய மனைவி கிருஷ்ணவேணி, மகன்கள் அரவிந்தன், கோகுல் ஆகியோர் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை பிரேம்குமார் உயிரிழந்தார்.
தகவலறிந்த ஆத்தூர் காவல் ஆய்வாளர் (பொ) கே.முருகேசன் விசாரிக்கசச் சென்ற போது, எஸ்.பி.யிடம் புகார் கொடுக்க உள்ளதாக பிரேம்குமாரின் மகன் அரவிந்தன் தெரிவித்தார்.
அதன் பேரில், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கனிக்கர் நேரில் வந்து விசாரித்து, புகாரின் பேரில் விசாரணை செய்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
விசாரணைக்குப் பிறகு மாலை 6 மணியளவில் தனியார் மருத்துவமனையில் இருந்து பிரேம்குமாரின் உடலை மீட்ட போலீஸார், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதனால் ஆத்தூர் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.