மதுபோதையில் பொதுமக்களை கத்தியைக் காட்டி விரட்டிய சம்பவம்: 11 பேர் மீது வழக்குப் பதிவு

ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி பகுதியில் போதையில் தாறுமாறாக காரை ஓட்டி வந்த கும்பல் இருசக்கர

ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி பகுதியில் போதையில் தாறுமாறாக காரை ஓட்டி வந்த கும்பல் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதை தட்டிக்கேட்ட நபரை தாக்கியும், தடுக்க முயன்ற பொதுமக்களை விரட்டிச் சென்றும் தாக்கிய 11 பேர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
ஓமலூரை அடுத்துள்ள காடையாம்பட்டி அருகே, டேனிஷ்பேட்டை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐந்து பேர் மது குடித்து விட்டு காரை ஓட்டி வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக காடையாம்பட்டியைச் சேர்ந்த மணிரத்னம் என்பவர் இருசக்கர வாகனத்தில் தனது பெரியம்மாவுடன் சென்றார். அப்போது, போதை ஆசாமிகள் காரை இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், இருவரும் தடுமாறி கீழே விழுந்தனர். இதில், பாதிக்கப்பட்ட மணிரத்னம் காரில் வந்தவர்களை தட்டிக் கேட்டார். இதில், போதை ஆசாமிகள் அவரை தாக்கினர். இதைக் கண்ட பொதுமக்கள் போதை ஆசாமிகளை தட்டிக்கேட்டனர். அப்போது போதை ஆசாமிகள் காரில் ஏறி தப்ப முயன்றனர். அப்போது சிலர் காரை நோக்கி கல்லை எடுத்து வீசினர். இதில் காரின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதையடுத்து போதை ஆசாமிகள் தாறுமாறாக காரை ஓட்டியதால், சாலையோர பள்ளத்தில் கார் இறங்கியது. இதையடுத்து காரில் இருந்து இறங்கிய ஐந்து பேரும் அரிவாள், கத்தி, உருட்டுக்கட்டை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பொதுமக்களை விரட்டத் தொடங்கினர். இதில் பயந்த பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். இதில் அதே பகுதியை சேர்ந்த சாமுவேல் என்பவர் காயமடைந்தார். பின்னர் அந்த கும்பல் காரை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீவட்டிப்பட்டி போலீஸார், காரை பறிமுதல் செய்து அதில் இருந்த கத்தி மற்றும் அரிவாள், உருட்டுக்கட்டைகளை கைப்பற்றினர். 
இந்நிலையில், ஓமலூர் டிஎஸ்பி சரவணன் விசாரணை நடத்தியதில், காரில் ஆயுதங்களுடன் வந்த காடையாம்பட்டி அம்பேத்கர் பகுதியைச் சேர்ந்த பத்ரிகேசவன் மகன் சாமுவேல், சுரேஷ்பாபு, வெங்கடேசன், சாமுவேலின் நண்பர்கள் இரண்டு பேர் என மொத்தம் ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும், காரை உடைத்தவரின் தரப்பில் நாராயணன் மகன் மணிரத்னம், ராஜேந்திரன், மணி, சின்னதம்பி, கல்யாணம், சக்திவேல் ஆகிய ஆறு பேர் என மொத்தம் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள 11பேரை தீவட்டிப்பட்டி போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com