தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு

அனைத்து பள்ளிகள், கல்லூரிகளும் கோடை விடுமுறைக்கு பின் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் திறக்கப்பட உள்ளன. 

அனைத்து பள்ளிகள், கல்லூரிகளும் கோடை விடுமுறைக்கு பின் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் திறக்கப்பட உள்ளன. அதையடுத்து  சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குள்பட்ட தனியார் பள்ளிகள், கல்லூரி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.
சென்னை போக்குவரத்து ஆணையர் உத்தரவின்படியும், தமிழ்நாடு பள்ளி வாகனங்களின் சிறப்பு விதிகள் 2012 (ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு) படியும் இந்த ஆய்வு நடைபெற்றது.
ஆய்வின்போது வாகனங்களின் தகுதிச் சான்றிதழ், காப்பீட்டின் தேதி, அவசர கால வழிகள், ஓட்டுநர்களுக்கு குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம், தீயணைப்புக் கருவிகள், படிக்கட்டுகள், ஜன்னல் கதவுகள், வாகனத்தின் மேற்பகுதி மற்றும் கீழ் பகுதிகளில் ஓட்டைகள் ஏதுவும் உள்ளதா? போன்ற ஆய்வுகளை வருவாய் கோட்டாட்சியர் மு. அமிர்தலிங்கம்,  வட்டார போக்குவரத்து அலுவலர் எ. அங்கமுத்து,  சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலர் என். இராமசாமி, காவல் ஆய்வாளர் என். முத்துசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் பி. இராஜேந்திரன், வி. கோகிலா ஆகியோர் ஆய்வு செய்தனர். அதில் 9 வாகனங்களில் குறைகள் இருந்தது கண்டறியப்பட்டு தற்காலிகமாக தகுதிச் சான்றிதழ் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது.
ஆய்விற்கு முன் சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலர் எ. அங்கமுத்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்திப் பேசியது:
வாகனங்களில் அதிக வேகமாக செல்லுதல், செல்லிட பேசிகளில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுதல்,  மது அருந்தி விட்டு ஓட்டுதல், சாலை விதிகளை மீறி ஓட்டுதல், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லுதல் ஆகியவையால் விபத்துகள் நேரிடுகின்றன. கடந்த 2017 முதல் 2019 வரை உள்ள கல்வியாண்டில் பல்வேறு அறிவுறுத்தல் காரணமாக தனியார் பள்ளி வாகனங்களால் சங்ககிரி வட்டத்தில் விபத்துகள் ஏதும் ஏற்படவில்லை அதே போல் இந்தாண்டும் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.  
வருவாய்க் கோட்டாட்சியர் மு. அமிர்தலிங்கம் பேசியது: 
பள்ளி, கல்லூரிப் பேருந்துகளை ஓட்டுபவர்கள் 40 மைல் வேகத்தில் வாகனங்களை இயங்கினால் விபத்தை முற்றிலும் தவிர்க்கலாம். பள்ளியிலிருந்து வாகனங்களை வெளியே எடுக்கும் போது வண்டிற்கு கீழே யாராவது இருக்கிறார்களா என்று  உதவியாளருடன் சென்று பார்த்தபிறகு தான் வாகனங்களை எடுக்க வேண்டும் என்றார். 
சங்ககிரி மாவட்டக் கல்வி அலுவலர் என். ராமசாமி
பேசியது:
பள்ளி வாகன ஓட்டுநர்கள் தங்கள் குடும்பத்திலோ அல்லது வேறு இடத்திலோ ஏற்படும் பிரச்னைகளை மனதில் வைத்துக் கொண்டு வாகனத்தை ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார். அதைத் தொடர்ந்து சங்ககிரி தீயணைப்பு நிலைய அலுவலர் ஏ. கோவிந்தன் தலைமையில் தீத்தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேட்டூரில்...
மேட்டூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குள்பட்ட பள்ளிகளின் பேருந்துகள் வியாழக்கிழமை தணிக்கை செய்யப்பட்டன.
மேட்டூர் வட்டாரத்தில் 208 பள்ளி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகள் துவங்கும் முன் பள்ளி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களைத் தணிக்கை செய்ய தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை
உத்தரவிட்டிருந்தது.
வியாழக்கிழமை மேட்டூர் வருவாய்க் கோட்டாட்சியர் லலிதா முன்னிலையில் மேட்டூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சிங்காரவேலன், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் முரளி ஆகியோர்  ஆய்வு மேற்கொண்டனர்.
மேட்டூர் வட்டாரத்தில் உள்ள 208 பேருந்துகளில் 83 பேருந்துகள் ஆய்வுக்கு வந்தன. பேருந்துகளின் அவசரகால கதவுகள், பிளாட்பாரம்,  பிரேக், தீயணைப்பு கருவிகள்,  வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் உட்பட 16  பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. இதில் 5 பேருந்துகளில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் அவற்றிற்கு தகுதிச்சான்றிதழ்
ரத்து செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com