முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
கால்நடை தீவனச் சந்தை அமைக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
By DIN | Published On : 18th May 2019 09:13 AM | Last Updated : 18th May 2019 09:13 AM | அ+அ அ- |

ஓமலூரில் கால்நடை தீவனச் சந்தை அமைக்க அரசு நடவடிக்கை வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம், கருப்பூர் உள்ளிட்ட வட்டாரத்தில் விவசாயம் மட்டுமே பிரதானத் தொழிலாக உள்ளது. இங்கு கால்நடை வளர்ப்பும் நடைபெறுகிறது.
இதற்காக பலர் தங்களது தோட்டத்தில் தீவன பயிர்களான கம்பு, ஒட்டுப்புல்,கினியா புல், கொழுக்கட்டைப் புல், சோளம், பயறு வகையில் வேலிமசால், குதிரைமசால், முயல் மசால்,தீவன தட்டைப் பயறு போன்றவை பயிரிட்டு கால்நடைகளுக்கு உணவாக கொடுத்து வருகின்றனர்.
தீவனப் பயிர்களை வளர்க்க நிலம் இல்லாத விவசாயிகள் சிலர் தோட்டங்களை குத்தகைக்கு எடுத்து கால்நடைகளைப் பராமரித்து வருகின்றனர். இதுமட்டுமல்லாது கால்நடைகளை சாலையோரத்தில் மேயவிட்டு வளர்த்து வருகின்றனர்.
கால்நடைகளை தன்னிச்சையாக மேயவிடும்போது தோட்டங்கள், பயிர்களில் புகுந்து சேதப்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே கால்நடைகளை விற்பனை செய்ய சந்தைகள் இருப்பதைப் போன்றே, கால்நடை தீவனங்களை பயிரிடும் விவசாயிகளிடம், தீவனங்களை பெற ஏதுவாக தீவன சந்தை அமைக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. மேலும், ,கால்நடைகளை விற்க பல்வேறு பகுதிகளில் சந்தைகள் உள்ளன. இதுபோல போதுமான நிலம் இல்லாத நிலையில், அரசு விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்தில் பெறப்பட்ட கால்நடைகளை வளர்க்க, தீவனச் சந்தை அமைக்க வேண்டும் எனஅப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.