முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
சூறைக்காற்றுடன் கனமழை: மரங்கள் சாய்ந்தன
By DIN | Published On : 18th May 2019 09:25 AM | Last Updated : 18th May 2019 09:25 AM | அ+அ அ- |

சேலத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையில் பல்வேறு இடங்களில் மரங்கள், போக்குவரத்து சிக்னல் கம்பங்கள் சாய்ந்தன.
கத்தரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் மே 4-இல் தொடங்கியதையடுத்து, தமிழகத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 104 டிகிரி அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்தது.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக பகல் நேரத்தில் கடுமையான வெயிலும், மாலை நேரத்தில் லேசான மழையும் இருந்து வருகிறது. இதையடுத்து, சேலத்தில் பல்வேறு இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்துள்ளது.
சுமார் ஒரு மணி நேரம் அளவுக்கு பெய்த இந்த மழையால் நகரின் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
திருச்சி பிரதான சாலையில் தாதகாப்பட்டி, குகை, சீரங்கன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் இருந்த பெரிய, பெரிய மரங்கள் காற்றின் வேகத்தால் தாக்குப்பிடிக்க முடியாமல் சாலையில் விழுந்தன. மேலும், மின் கம்பங்களும் சாய்ந்தன. இதுதவிர, போக்குவரத்து சிக்னல் கம்பங்களும் விழுந்து சேதம் அடைந்தன. இந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டது. இதையடுத்து, வாகனங்கள் அன்னதானப்பட்டி வழியாக திருப்பி விடப்பட்டன. மழை நின்ற அடுத்த சில நிமிடங்களிலேயே தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலையில் விழுந்து கிடந்த மரங்களையும், மின்கம்பங்களை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.
சாலையில் விழுந்து கிடந்த மரங்களை இயந்திரங்களைக் கொண்டு துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர்.
வாழப்பாடியில்... வாழப்பாடியில் வெள்ளிக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்ததில், புளியமரம் சாய்ந்தது.
சேலம்-கடலூர் சாலையில் சுண்ணாம்பு சூளை தனியார் நூற்பாலை அருகே பெரிய புளிய மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி பணியாளர்கள் மரக்கிளையை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
இதுதவிர, பல வணிக நிறுவனங்களின் விளம்பரத் தட்டிகளும், ஏ.குமாரபாளையம், மெட்டுக்கல் உள்ளிட்ட கிராமங்களில் பலரது வீட்டுக்கூரைகளும் காற்றில் சேதமடைந்தன.